Homeசெய்திகள்சென்னைநடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் 15 போலீசார் திடீர் சோதனை – போதைப்பொருள் பயன்படுத்துவதாக வந்த...

நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் 15 போலீசார் திடீர் சோதனை – போதைப்பொருள் பயன்படுத்துவதாக வந்த புகாரால் பரபரப்பு!

-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ‘ஃபயர்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் தொடர்பாக போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் 15 போலீசார் திடீர் சோதனை – போதைப்பொருள் பயன்படுத்துவதாக வந்த புகாரால் பரபரப்பு!

தனது வீட்டில் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், தான் ஒருபோதும் போதைப்பொருள் பயன்படுத்தியதில்லை என்றும் நடிகர் பாலாஜி முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வரும் பாலாஜி முருகதாஸ் வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 15 போலீசார் திடீரென வந்து சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனை குறித்து நடிகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், முறையான ஆவணங்கள் மற்றும் வாரண்ட் இல்லாமல் போலீசார் தனது வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு ரத்தப் பரிசோதனை கூட மேற்கொள்ளலாம் என்றும், வாரண்ட் இல்லாமல் இவ்வாறு சோதனை நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தப் பதிவில் முதலமைச்சர் விஜய்யையும் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான பெண்ணின் குடும்பப் புகாரால் சர்ச்சை?

இதற்கிடையே, நடிகர் பாலாஜி முருகதாஸ் தொடர்பாக திருமணமான பெண் ஒருவரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே புகார் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணுக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அந்தப் பெண்ணை அவரது கணவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

தனது மகளின் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு நடிகர் பாலாஜி முருகதாஸ்தான் காரணம் எனக் குற்றம்சாட்டி, அந்தப் பெண்ணின் தாயார் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், பாலாஜி முருகதாஸ் வீட்டில் அடிக்கடி போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாகவும், பல பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அவர் நடந்துகொள்வதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சோதனையில் மது பாட்டில்கள் மட்டுமே இருந்ததாகத் தகவல்

இந்தப் புகாரின் அடிப்படையில் திருவேற்காடு போலீசார் நடிகரின் வீட்டில் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பல மது பாட்டில்கள் மட்டுமே இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் மீது புகார் அளிக்கப் போவதாக பாலாஜி முருகதாஸ் அறிவிப்பு

இதற்கிடையே, தனது வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ள பாலாஜி முருகதாஸ், தான் தனியாக வசித்து வரும் வீட்டிற்கு சுமார் 15 போலீசார் வந்து, கஞ்சா பயன்படுத்துவதாகப் புகார் வந்துள்ளதாகக் கூறி சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்த மசாலா டப்பா உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் சோதனை செய்துவிட்டு, எதுவும் கிடைக்காமல் போலீசார் சென்றதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இவ்வளவு அதிகமான போலீசாரை அழைத்து வந்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுபோல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு எதிராகப் பொய்யான புகார் அளித்தது யார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும், சோதனை நடத்திய போலீசார் மீது புகார் அளிக்கப் போவதாகவும் பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகரின் வீட்டில் நடைபெற்ற சோதனை, குடும்பப் பிரச்சினை தொடர்பான புகார் மற்றும் போலீசாரின் நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம் ஆகியவை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் போலீசாரின் விசாரணை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.

சென்னையில் அதிகரித்த காற்று மாசு! தீபாவளி பட்டாசுகளால் பாதிக்கப்பட்ட காற்றின் தரம் – ராயபுரத்தில் அதிகபட்ச AQI 238!

MUST READ