தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியான ‘ஓம்’ படப் பாடல் மூலம் அவரது அரசியல் வருகை உணர்த்தப்படுகிறதா என்றும், விஜய் பாணியைப் பின்பற்றி தனுஷ் அரசியலுக்கு அடியெடுத்து வைக்கிறாரா என்றும் ரசிகர்கள் மத்தியில் தீவிர விவாதம் எழுந்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் புதியத் திரைப்படமான ‘ஓம்’ (OM) படத்தின் முதல் பாடலான ‘அழகா லூவா’ (Alaakaa Loova) தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இப்பாடலின் வரிகள், அவரது அரசியல் வருகை குறித்த பேச்சை மீண்டும் சூடேற்றியுள்ளன. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடலை, ‘தங்கா மாரி’ புகழ் கவிஞர் ரோகேஷ் எழுதியுள்ளார்.

தீவிரமடையும் அரசியல் ஊகங்கள்
நடிகர் விஜயைத் தொடர்ந்து தனுஷும் தீவிர அரசியலுக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு முதலமைச்சர் ஆகும் விருப்பம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில், தனுஷ் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிப்பது மற்றும் மாவட்டம் வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்களின் ரத்ததான முகாமில் அவர் பேசிய பேச்சுக்கள், அவரது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்வதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல் வரிகள்
இந்நிலையில், ‘ஓம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகா லூவா’ பாடலின் சில வரிகள், தனுஷின் அரசியல் வருகையை மறைமுகமாக உணர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர், “All Time அன்பா இருக்கும் என் தங்கமே, எனக்காக காத்திருக்கும் என் சொந்தமே, அது போதும் விடமாட்டேன் எப்போதும் எப்போதுமே!” “கத்துற ஜனங்க கை ஓங்கனும் கட்டளையிட்டதும் தூளாகணும், உத்தரவிட்டதும் அடி நொறுக்கணும், சத்தமே இல்லாம அது நடக்கணும், விட்டதைத் தொட்டத வா ஜெயிக்கணும், நல்லா இருப்போம் நம்ம இனம்!”
விஜய் பாணியைப் பின்பற்றுகிறாரா தனுஷ்?
நடிகர் விஜய் தனது திரைப் பயணத்தின் போது ‘தளபதி தளபதி’, ‘ஆளப்போறான் தமிழன்’, ‘ஒரு விரல் புரட்சி’ போன்ற பாடல்கள் மூலம் தனது அரசியல் எண்ணங்களை முன்கூட்டியே ரசிகர்களுக்கு உணர்த்தியிருந்தார். தற்போது தனுஷும் அதே பாணியைக் கையிலெடுத்து, பாடல்கள் மூலம் தனது அரசியல் வருகைக்கான அடித்தளத்தை அமைக்கிறாரா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்திலும், வலைதளங்களிலும் பரவலாக எழுந்துள்ளது.
ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!
