காந்தா படத்தின் ஃபர்ஸ்ட் டே கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் காந்தா. துல்கர் சல்மான் இந்த படத்தில் பழம்பெரும் நடிகரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். துல்கர் சல்மானின் வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ராணா டகுபதியின் ஸ்பிரெட் மீடியா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது. ஜானு சந்தர் இதற்கு இசையமைக்க செல்வமணி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குனருக்கும், நடிகருக்கும் இடையிலான ஈகோவை மையமாக வைத்து சுவாரஸ்யமான திரைக்கதையில் வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மான் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்த துல்கர் சல்மானுக்கு இந்த படத்திற்காக விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு இணையாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். சமுத்திரகனி வேறொரு பரிமாணத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் ‘காந்தா’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


