1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கொடிய புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து, பலருக்கு ஊக்கமளிக்கும் ஒரு தன்னம்பிக்கை நாயகியாகவும் திகழ்கிறார்.


2012-ஆம் ஆண்டில், மனிஷா கொய்ராலாவுக்கு நான்காம் நிலை கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 11 மணி நேர நீண்ட அறுவை சிகிச்சை மற்றும் பல சுற்று கீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு, 2013-ல் அவர் அந்த நோயை முழுமையாக வென்றார்.
தனிமையும் பயமும் சூழ்ந்த அந்த இரவு
சமீபத்தில் பிரபல டிஜிட்டல் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புற்றுநோய் கண்டறியப்பட்ட அந்த ஆரம்ப நேர அனுபவத்தைப் பற்றி மனிஷா கொய்ராலா மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்:
“பகலில் எனக்குப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்குப் பின் வந்த அந்த இரவு, எனக்கு மிகவும் தனிமையான மற்றும் நீண்ட இரவாக இருந்தது. அது ஒரு இருண்ட வெளியைப் போல உணர்ந்தேன். ‘நான் இறந்துவிடுவேன்’ என்றே அப்போது நினைக்கத் தோன்றியது.”
மேலும் தொடர்ந்த அவர், “எனக்குப் புற்றுநோய் வந்தபோதுதான், ஒரு நோயாளி எவ்வளவு தனிமையாக உணர்வார் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஒரு கூட்டத்தின் மத்தியிலும் தனிமையை உணருவது என்பது விவரிக்க முடியாத கொடூரம். அந்தக் காலகட்டம், நான் வாழ்க்கையில் அனுபவித்ததிலேயே மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான நேரம்” என்று பகிர்ந்துள்ளார்.
ஜென்ஸி தலைமுறையினருக்கு ஆதரவு
சமீபத்தில் காத்மாண்டுவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற மனிஷா கொய்ராலா, இளம் தலைமுறையினரின் ஆற்றலை ஆதரிப்பதாகப் பேசினார். ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் எழுந்து நின்று போராடுவதைப் பாராட்டி வணங்குவதாகவும் தெரிவித்தார்.
மனிஷா கொய்ராலா நேபாளத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கொய்ராலா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெய் – பிரியங்கா மோகன் இணையும் புதிய படம்: ரவி பஸ்ரூர் இசையமைப்பில் பிரம்மாண்டமாகத் தொடக்கம்!
