தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், டிரெய்லர் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.


மீண்டும் அம்மன் அவதாரத்தில் நயன்தாரா!
கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படம் புராணப் பின்னணியையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டீசல் காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘மூக்குத்தி அம்மன் 2’!
நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரிப்பில் இணைந்துள்ளது.
‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு!
‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ (Rise of Mahasakthi) என்ற பெயரில் வெளியான டீசரில் புராணக் காலப் பின்னணி, ஆபத்தை எதிர்கொள்ளும் ஓர் அரசாட்சி மற்றும் நிகழ்காலத்தில் மக்களை அச்சுறுத்தும் பேரிடர் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் படத்தில் பிரம்மாண்டமான காட்சிகளும் அதிரடி திருப்பங்களும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும், படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியீடு!
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 6, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம், தீபாவளி திரை விருந்தாக ரசிகர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
