கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஹாய்’. காதலை மையமாக வைத்து எதார்த்தமான கதைகளத்துடன் உருவாகியிருந்த இப்படத்தை ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. ஜென் மார்டின் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழுவினர் கலந்துகொண்ட நன்றி தெரிவிக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.


“மாதக் கடைசியிலும் படம் ஓடியது ஆச்சரியம்!” – நடிகர் கவின் நெகிழ்ச்சி
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய நடிகர் கவின் கூறுகையில், “மாதக் கடைசியில் வெளியான எங்கள் படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவைக் கொடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்திற்கு முன்பாகச் சமீபத்தில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால், ‘இந்தத் தருணத்தில் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்க மக்களிடம் பணம் இருக்குமா?’ என்ற ஒரு சின்ன பயம் எங்களிடம் இருந்தது. ஆனால், அதைத் தாண்டி மக்கள் கொடுத்த ஆதரவு எங்களை வியப்பிலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த நன்றி தெரிவிக்கும் விழா எதற்காக என்றால், இப்போது புதிய மாதம் பிறந்துவிட்டது, அனைவரின் கைக்கும் சம்பளம் வந்துசேர்ந்திருக்கும். அதனால், வீட்டில் உள்ள அத்தியாவசியத் தேவைகளை வாங்கிவிட்டு, எஞ்சியிருக்கும் தொகையில் பொழுதுபோக்கிற்காக ஒதுக்கிய பணத்தில் இந்தப் படத்தைத் தியேட்டருக்கு வந்து பாருங்கள். கண்டிப்பாக இந்தத் திரைப்படம் உங்களுக்கு முழுமையான திருப்தியைத் தரும்” என்று கலகலப்பாகத் தெரிவித்தார்.
இயக்குநர் விஷ்ணு எடவனின் சுவாரஸ்யமான பின்னணி கதை!
படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் குறித்துப் பேசுகையில் பல சுவாரஸ்யமான தகவல்களை கவின் பகிர்ந்துகொண்டார். “இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள்தான் இயக்குநர் விஷ்ணுவுக்குத் திருமணம் நடைபெற்றது. அதனால், இந்தத் திரைப்படம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

படப்பிடிப்பு தொடங்கியபோது மிகவேகமாகத் தொடங்கினோம். ஆனால், இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பு சற்று தொய்வடைந்தது. பொதுவாகப் படப்பிடிப்பு தளத்தில் மேக்கிங் வீடியோ எடுப்பது வழக்கம். ஆனால், இயக்குநர் விஷ்ணு தனியாக ஒரு வீடியோவை எடுத்துக்கொண்டே இருந்தார். என்னவென்று விசாரித்துப் பார்த்தால், ஷூட்டிங் அப்டேட்டுகளைத் தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்! படம் நன்றாகத்தான் நடக்கிறது என்பதைப் பெண் வீட்டாருக்கு அவர் அப்போதே சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது இந்த நன்றி தெரிவிக்கும் விழாவின் வெற்றி மூலம், படம் மெகா ஹிட் என்பதை அவர்களுக்கு அவர் முழுமையாகப் புரிய வைத்திருப்பார். எங்களது இந்தக் கூட்டணி தொடர்ந்து பல வெற்றிகளை வழங்கும் என நம்புகிறேன்” என்று கவின் நகைச்சுவையுடன் பேசி அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
