Homeசெய்திகள்சினிமாஎஸ் ஜே சூர்யாவின் 55வது பிறந்தநாள்...... துப்பாக்கி சத்தங்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

எஸ் ஜே சூர்யாவின் 55வது பிறந்தநாள்…… துப்பாக்கி சத்தங்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

-

நடிகர் எஸ் ஜே சூர்யா தனது 55 ஆவது பிறந்த நாளை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

எஸ் ஜே சூர்யா ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். அந்த வகையில் இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான வாலி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு விஜய் மற்றும் ஜோதிகா கூட்டணியில் குஷி திரைப்படத்தை இயக்கினார். இந்த இரு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் நானி என்ற திரைப்படத்தையும், பவன் கல்யாண் நடிப்பில் புலி என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
இவ்வாறாக முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா நடிப்பதில் ஆர்வம் கொண்டு 2004 ஆம் ஆண்டு வெளியான நியூ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் சில வருடங்கள் சினிமா துறையில் இருந்து சற்று விலகி இருந்தார். அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய இறைவி என்ற திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு ஸ்பைடர், மெர்சல், மாநாடு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார். அதாவது இவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை விட வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் திரையுலகில் வில்லன் என்றாலே எஸ் ஜே சூர்யா என்ற பெயர் தான் மிகப் பிரபலமாக பேசப்படுகிறது. அந்த வகையில் இவர் தற்போது மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதற்கிடையில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களிலும் கூட எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு வில்லாதி வில்லனாக நடித்து வரும் எஸ் ஜே சூர்யா தனது 55 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். திரை உலக பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் மார்க் ஆண்டனி  படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ