சூர்யா 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் இவர், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தன. மேலும் இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே 30ஆம் தேதி தொடங்கும் எனவும், இந்த படத்தை அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.