‘கோமாளி’, ‘லவ் டுடே’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது புதிய தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் ‘PR Show’ என்ற பெயரில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் தனது முதல் திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
6 உதவி இயக்குனர்கள் இணையும் ‘The Alpha unit’
பிரதீப் ரங்கநாதன் தான் தயாரிக்கும் முதல் படத்திற்குத் தானே கதையும் எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய 6 பேர் கொண்ட குழுவினர் ஒன்றிணைந்து, ‘The Alpha unit’ என்ற பெயரில் இந்தப் படத்தை இயக்க உள்ளனர். சினிமா வரலாற்றில் உதவி இயக்குனர்கள் ஒரு குழுவாக இணைந்து படத்தை இயக்குவது இதுவே முதன்முறை என்பதால், திரையுலகினர் மத்தியில் இம்முயற்சி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்
தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ மற்றும் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான மமீதா பைஜூ இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் நடிகை சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அண்மையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டான ‘குகு குகு’ (Katchi Sera) பாடல் புகழ் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
3 மொழிகளில் உருவாகும் பான்-இந்திய படம்
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் பான்-இந்திய (Pan-Indian) திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர், நடிகர் எனத் தொட்டதெல்லாம் ஹிட்டடித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் தடம் பதித்துள்ளதால், அவரது ‘PR Show’ நிறுவனத்தின் முதல் படத்திற்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
