நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியானது. மேலும் ‘காந்தி டாக்ஸ்’, ‘ட்ரெயின்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தும் விஜய் சேதுபதி ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தை வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது மீண்டும் விஜய் சேதுபதி, அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது இயக்குனர் அட்லீ, ‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியா ரோலில் நடிக்க உள்ளார் என புதிய தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.