ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வெளியானது. அதே சமயம் ரவி, ‘கராத்தே பாபு’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் ரவி. இந்நிலையில் தான் சமீபத்தில் ரவி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க இருக்கிறார். அந்த வகையில் யோகி பாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் ரவி. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தை இயக்கி இயக்குனராகவும் மாற உள்ளார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலையில் தற்போது அந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.