spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

-

- Advertisement -

திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இணைவதால் தான் திமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் வரும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஓபிஎஸ், முதலமைச்சரை சந்தித்து பேசியது குறித்து  திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஓபிஎஸ் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் திமுகவில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அவருக்கு எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. பாஜகவை நம்பினால் என்ன நிலைமைக்கு ஆளாவோம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் பாஜகவும் அவரை நம்புவதற்கு தயாராக இல்லை. காரணம் ஓபிஎஸ் உடன் இருந்த எல்லோரும் திமுகவில் இணைந்துவிட்டனர். அவருடைய இயல்பான நடவடிக்கைகள் காரணமாக தான் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடிய நிலைமையில் அவர் இல்லை. தன்னுடன் இருந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஓபிஎஸ் தவறிவிட்டார். அதனுடைய விளைவு அவரிடம் இருந்த எல்லோரும் விலகி சென்றுவிட்டார்கள். உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் மட்டும்தான் அவருடன் நின்று கொண்டிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று ஐயப்பன் சொல்கிறார் என்றால், எந்த அளவுக்கு அவர் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

திமுகவை ஆதரிக்க வேண்டும், திராவிட இயக்கத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல. அரசியலில் அவர்களுக்கு திமுகவை தவிர்த்து வேறு போக்கிடம் இல்லை. அதனால் திமுகவின் பக்கம் நிற்கிறார்கள். ஒபிஎஸ் முதலமைச்சரை சந்தித்த நிகழ்வு மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பியுள்ளது. என்னை பொருத்தவரை ஓபிஎஸ் இடம் என்ன கட்டமைப்பு இருக்கிறது என்று முதலமைச்சர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார்?

திமுக கூட்டணியில் ஒரு டஜன் கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகளுக்கு சீட்டுகளை பகிர்ந்து கொடுப்பதிலே திமுக நெருக்கடியை சந்தித்து வருகிறது. கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்த 8 கேட்பவர்களுக்கு 6 சீட்டுகளாவது தர வேண்டும்? திமுக 170 இடங்கள் வரை போட்டியிட வேண்டும். இப்படியான சூழலில் 2 எம்எல்ஏக்களை மட்டும் வைத்திருக்கும் ஓபிஎஸ் உள்ளே வந்தால், யாருக்கு சீட் கொடுப்பது? அவர் வந்தால் திமுகவுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது? இவற்றை எல்லாம் அறியாதவர் இல்லை முதலமைச்சர். எனவே திமுகவில் அவர்களை சேர்த்துக்கொள்வார்கள்.

முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஒருவர் திமுகவில் இணைகிறார் என்கிற செய்தி தமிழ்நாட்டு அரசியலில் பதியப்படும் என்று நான் புரிந்துகொள்கிறேன். அது பெரிய செய்திதான். ஓபிஎஸ் வருகையால் திமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் எல்லாம் வந்துவிடும். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை திமுக அறுவடை செய்துவிடும் என்பது எல்லாம் ஒன்றும் இல்லை. இயல்பாகவே முக்குலத்தோர் வாக்குகள் திமுகவுக்கு கிடைப்பதற்கான சூழல்தான் இருக்கிறது. மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அந்த விமர்சனத்தை வைப்பதை நாம் பார்க்கிறோம்.

அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் யார்? என்றெல்லாம் கேட்கிறார்கள். முக்குலத்தோர் சமூகத்திற்கு அதிமுக தான் பாதுகாப்பு அரணாக இருக்கிறது என்கிற அந்த சூழல் மாறி, திமுகவும் முக்குலத்தோர் சமூகத்தின் அன்பை பெற்றிருக்கிற கட்சியாக தான் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஓபிஎஸ் வந்துதான் முக்குலத்தோர் வாக்குகள் திமுகவுக்கு வர வேண்டும் என்பது இல்லை. அப்படி ஓபிஎஸ்க்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் ராமநாதபுரத்தில், முஸ்லீம் லீக்கின் ஏணிச் சின்னத்தை கூட வீழ்த்த முடியாத அளவுக்கு திமுக வலிமையாக இருந்தது என்பதுதான் பொருள்.

“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்

முதலமைச்சர் தேமுதிக விவகாரத்தில் எடுத்திருக்கும் முடிவை வைத்து பார்க்கிறபோது 500, 600 வாக்குகளை கூட நாம் இழந்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார். அந்த அடிப்படையில் ஓபிஎஸ்-ஐ சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஏதாவது ஒன்றிரண்டு வாக்குகள் கூட கிடைத்தாலும் அந்த வாக்குகள் கிடைக்கட்டும் என்று முதலமைச்சர் கருதக்கூடும். ஓபிஎஸ்ஐ பொருத்தவரை ஊடக வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றால் அவர் திமுகவுக்கு வருவது தான் வழி. ஆனால் அவர் அந்த முடிவை எடுப்பாரா? நாளைக்கே டெல்லியில் இருந்து ஒரு போன் கால் வந்தால், அதற்கு அப்படியே கீழ்பணிந்து நடப்பார். அதனால் அவர் திமுகவுக்கு உறுதியாக வருவாரா? என்பது தெரியாது. ஆனால் வந்தால் வரவேற்க வேண்டியதுதான். அதனால் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால், அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் சாதகம். அவர் ஏற்கனவே திமுகவின் தூண்டுதலின் பேரில் தான் ஓபிஎஸ் கலகம் செய்வதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையம் யாருடைய வழிகாட்டுதலில் இயங்குகிறதோ அவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கத்திலேயே இருக்கிறார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு இரட்டை இலை சின்னத்திற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவார்களா? இதை ஓபிஎஸ் நன்றாக அறிந்துள்ளார்.

"நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை"- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!

இந்த நிலையில், ஓபிஎஸ்-ஐ திமுக எந்த வகையில் பயன்படுத்தப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாகும். வைத்திலிங்கம் திமுகவுக்கு வந்துள்ள நிலையில், அவரை தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு செயலாளராக அறிவிக்க போகிறார்கள் என்று தகவல் வருகிறது. அந்த பொறுப்புக்கு அவர் முழு தகுதியுள்ளவர். செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன், முத்துச்சாமி போன்றவர்கள் எல்லாம் அதிமுகவில் தளகர்த்தர்களாக இருந்தவர்கள்.அவர்கள் பணியாற்றினால் களத்தை வென்று எடுப்பார்கள் என்று திமுக நம்புகிறது. ஆனால் ஓபிஎஸ்-ன் டிராக் ரெக்கார்ட்டை பார்த்தோம் என்றால், தேனி மாவட்டத்திலேயே சையது கானை தவிர வேறு யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை.

இன்றைக்கு அவரோடு இருக்கிற பெயர் சொல்கிற அளவுக்கான தலைவரை சொல்ல முடியுமா? ஒபிஎஸ் ஆல் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட தருமரே எடப்பாடி பழனிசாமியிடம் சென்றுவிட்டார். நிராயுத பாணியாக இருக்கும் ஓபிஎஸ்க்கு என்ன பொறுப்பு வழங்க முடியும். திமுக வேண்டும் என்றால் பெருந்தன்மையோடு உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கலாம். ஆனால் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா போன்றவர்கள் இருக்கும்போது, நேற்றைக்கு கட்சிக்கு வந்தவர்களை கொண்டுவந்து அந்த பதவியில் உட்கார வைக்க முடியாது.

OPS

அதிமுகவில் இருந்து வந்தவர்களை மாவட்ட செயலாளர் ஆக்கியுள்ளனர். அமைச்சர் ஆக்கியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு கட்சிக்குள் பெரிய பதவியை வழங்கவில்லை. ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை முன்னாள் முதலமைச்சர் என்கிற லேபிள் மட்டும்தான் உள்ளது. அதை வைத்து திமுகவுக்கு எதாவது லாபம் உள்ளதா? வாழ்விழந்தவர்களுக்கு வாழ்வு அளிக்க என்ன மறுவாழ்வு இல்லமா வைத்திருக்கிறார்கள்? திமுக கோட்பாட்டின் வழி கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி. திருச்சி சிவா, ஆ.ராசா பேசுகிற கொள்கை தத்துவத்தை இவரால் யோசித்துப் பார்க்கக்கூட முடியாது. எனவே அவ்வவு பெரிய பொறுப்பை எல்லாம் திமுக வழங்கிவிடாது.

ஓபிஎஸ் திமுகவில் சேர்வாரா? என்ற செய்தியே வெளியில் இல்லை. அவர் முதலமைச்சரை பார்த்துவிட்டு போயிருக்கிறார். பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அவர் சேருவரா? என்ற செய்தி உண்மையானால் தான், அவருக்கு என்ன தரப் போகிறது திமுக என்கிற செய்தி வரும். என்னை பொருத்தவரை ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் மீண்டும் அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கான செயல்கள் தான் நடக்குமே தவிர அதை தாண்டி வேறு எந்த பொறுப்பும் கிடைக்காது. காரணம் அவரிடத்தில் எந்த பலமும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ