
ஒருகாலத்தில் இளைஞர்களின் சொர்க்கபுரியாகவும், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் திகழ்ந்த தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, இன்று பயமும் பதற்றமும் நிறைந்த ஒரு களமாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் மிகவும் முக்கியமான ‘ஒயிட் காலர்’ (White collar) வேலைவாய்ப்பாகக் கருதப்படும் ஐ.டி துறையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டுதோறும் புதிய பணியாளர்கள் பெருமளவில் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வரவால் இந்த டிரெண்ட் தலைகீழாக மாறியுள்ளது.
வழக்கமான ஐ.டி சேவைகளை ஏ.ஐ மிகக் குறைந்த செலவில் எளிதாகச் செய்து முடிப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் ஏ.ஐ நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆரக்கிள்’ (Oracle) அனுப்பிய ஒற்றை மின்னஞ்சல், ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை ஒரே இரவில் தகர்த்தெறிந்திருக்கிறது. ஆரக்கிள் நிறுவனம் உலகளவில் மேற்கொண்ட 30,000 பணியாளர்கள் நீக்கத்தில், சுமார் 12,000 பேர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமன்றி, இந்தியாவின் முன்னணி 6 ஐ.டி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா, மற்றும் எல்டிஐ மைண்ட்ட்ரீ (LTI Mindtree) ஆகியவற்றின் கடந்த 12 மாத கால தரவுகளும் பெரும் கவலையை அளிப்பதாக உள்ளன. கடந்த 12 மாதங்களில் இந்த டாப் 6 நிறுவனங்களில் இருந்து மட்டும் மொத்தம் 92,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக ஆட்களைச் சேர்ப்பதை விட வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இந்த 6 முன்னணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணியாளர் சேர்க்கை 24,422 ஆகக் குறைந்துள்ளது.
பொதுவாக ஐ.டி துறையில் 11 முதல் 15 சதவீதம் பேர் வெளியேறுவது (Attrition Rate) இயல்பான ஒன்றுதான் என்றாலும், வெளியேறும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஊழியர்களை நிறுவனங்கள் மீண்டும் பணியமர்த்தவில்லை என்பதுதான் தற்போதைய மிக முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

உலகளவில் 2,45,953 தொழில்முறைப் பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர்.2026-ன் முதல் 3 மாதங்களில் மட்டும் சுமார் 85,156 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏ.ஐ, தானியங்கி தொழில்நுட்பங்கள் (Automation), மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவையே இந்த அதிரடி மாற்றங்களுக்கு முதன்மை காரணங்களாகும்.
நிறுவனங்கள் ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பில்லியன் கணக்கில் டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இதன் விளைவாக, ஐ.டி துறை மட்டுமன்றி, விவசாயம் தொடங்கி பாதுகாப்பு அமைச்சகம் வரை அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ நுழையத் தொடங்கியுள்ளது. மனித உழைப்பிற்கு பதிலாக இயந்திரங்கள் மற்றும் மென்பொருள்களை பயன்படுத்தும் வேகம் அதிகரித்திருப்பது, எதிர்கால இளைஞர்களின் நிலையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு ஊழியரின் வேலையிழப்பு என்பது தனிநபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; அது ஒரு முழு குடும்பத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்த சமூகத்தின் பிரச்சினை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பல லட்சம் குடும்பங்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வேலை உறுதி இல்லாத சூழல் உருவாகும்போது, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. தொடர் பணிநீக்கம், வருமானமின்மை, கடனை அடைக்க முடியாத நிலை போன்றவை இளைஞர்களின் மனநலனை கடுமையாகப் பாதிக்கின்றன. இந்தியாவின் தூண்களான இளைஞர் சமுதாயம் அமைதியையும் நம்பிக்கையையும் இழப்பது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் விடப்பட்ட கடுமையான எச்சரிக்கை மணியாகும்.

ஒருபுறம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அதேவேளையில், மறுபுறம் புதிய வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. NASSCOM அறிக்கையின்படி 2026-க்குள் இந்தியாவில் சுமார் 10 லட்சம் ஏ.ஐ திறன் படைத்த பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், இந்தத் தேவையில் 20% அளவுக்குக்கூட இந்தியப் பணியாளர்களிடம் ஏ.ஐ சார்ந்த திறன்கள் (AI skills) இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இந்தத் திறன் இடைவெளியையும் வேலைவாய்ப்புச் சிக்கலையும் களைய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
- வேலையிழந்த இளைஞர்களுக்கான உடனடி சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டங்கள் என்ன?
- நிறுவனங்கள் தன்னிச்சையாக மேற்கொள்ளும் பிரம்மாண்ட பணிநீக்கங்களைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா?
- நமது கல்வி அமைப்பும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் நவீன தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகின்றனவா?
- தினம் தினம் நாளிதழ்களில் வரும் பணிநீக்கச் செய்திகளை சாதாரண ஒரு தகவலாகக் கடந்து செல்லப்போகிறோமா? அல்லது இது வரவிருக்கும் ஒரு பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறி என்பதை உணர்ந்து செயல்படப்போகிறோமா?இந்தக் கேள்விகளுக்கான பதிலிலும், எடுக்கும் உடனடி நடவடிக்கைகளிலும்தான் இந்தியாவின் எதிர்காலமும் இளைஞர்களின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது.
