Homeசெய்திகள்இந்தியாஓமன் அருகே வணிகக் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம் – மத்திய அரசு...

ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம் – மத்திய அரசு கடும் கண்டனம்!

-

- Advertisement -

ஓமன் கடற்கரை அருகே ஹார்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய வணிகக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

கப்பல் மீது எறிபொருள் தாக்குதல்

‘MT On Peace’ என்ற வணிகக் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக ஓமன் கடற்கரையை ஒட்டி சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கப்பலில் மொத்தம் 19 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் மொத்தம் 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 11 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் மற்றும் அதனை நடத்தியவர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

காயமடைந்தவர்கள் ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த பணியாளர்களை ஓமன் அதிகாரிகள் மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக கசாப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களை மீட்க உதவிய ஓமன் அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியா கடும் கண்டனம்

வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச கடல் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள், கடற்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், சர்வதேச நீர்வழிகளில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் நடைபாதை ஓரத்தில் திடீரென வெடித்த மின்மாற்றி – இருவர் படுகாயம்

MUST READ