ராஜஸ்தானைச் சேர்ந்த ரோஹிணி குர்ஜார், வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான சோதனைகளை தாண்டி ராஜஸ்தான் நிர்வாக சேவை (RAS) 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கணவரை இழந்த பிறகு கிராமத்தினரால் ‘சூனியக்காரி’ என அவதூறாக அழைக்கப்பட்ட அவர், தனது விடாமுயற்சியால் அரசு பணியைப் பெற்றுள்ளார்.


அஜ்மீரைச் சேர்ந்த ரோஹிணி, 2006-ம் ஆண்டு தனது கிராமமான குக்ராவில் பட்டப்படிப்பை முடித்த முதல் பெண்ணாக இருந்தார். திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட அவர், கணவர் 2021-ம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து மீண்டும் படிப்பைத் தொடங்கினார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக்குத் திரும்பிய அவர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார்.
கணவர் உயிரிழந்த பிறகு ரோஹிணிக்கு குடும்பத்தினரிடமிருந்தும் சமூகத்தினரிடமிருந்தும் பல்வேறு அவமதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கணவரின் மரணத்துக்கு அவரையே காரணம் என சிலர் குற்றம்சாட்டி, ‘சூனியக்காரி’ என அழைத்துள்ளனர். ஆனால் அவரது சகோதரர் நரேந்திர குர்ஜார் மற்றும் பாட்டி மாமியார் புஷ்பா தேவி ஆகியோர் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்தனர்.
RAS தேர்வுக்கான தயாரிப்பில் இருந்தபோது மேலும் பல துயரங்கள் அவரைத் தாக்கின. அவரது பாட்டி மாமியார் புஷ்பா தேவி உயிரிழந்த நிலையில், 2024-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி அவரது 10 வயது மகளும் திடீரென உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த ரோஹிணி தேர்வை எழுத வேண்டாம் என முதலில் முடிவு செய்தார். ஆனால் தனது இளைய மகளின் எதிர்காலத்தை நினைத்து தேர்வை எழுத முடிவு செய்தார்.
இதற்கிடையே தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ரோஹிணியின் கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், ஒரு கண் கட்டப்பட்ட நிலையிலேயே RAS முதன்மைத் தேர்வை எழுதினார். கடுமையான வலியையும் துயரத்தையும் கடந்து அவர் தேர்வை எதிர்கொண்டார்.
அவரது விடாமுயற்சிக்கு தற்போது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. RAS 2024 தேர்வில் MBC விதவை பிரிவில் இரண்டாவது இடத்தை ரோஹிணி பிடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ராஜஸ்தான் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனது வெற்றியை ஒரு அரசு வேலை கிடைத்த சாதனையாக மட்டும் பார்க்காத ரோஹிணி, பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்றும், பெண்கள் குறித்து நிலவும் பழமைவாத சிந்தனைகள் மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பல தடைகளைத் தாண்டி அவர் பெற்றுள்ள இந்த வெற்றி, தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஹைதராபாத் நகைக்கடையில் துணிகர கொள்ளை: ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் திருட்டு!
