பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக இந்திய சிம் கார்டுகளை வாங்கி துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் அவர்கள் நடத்திய உரையாடல்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


தெற்கு டெல்லியின் சாராய் காலே கான் பகுதியைச் சேர்ந்த முகமது சாஹில் (25), அவரது மனைவி சமீரா (21) ஆகிய இருவரும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 கைபேசிகளில் முக்கிய ஆதாரங்கள்
கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து 2 கைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்தக் கைபேசிகளில் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரையாடல்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துணை ஆணையர் நர்ரா சைதன்யா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களைச் சேகரிப்பதற்காக இந்திய சிம் கார்டுகளைப் பெற்று துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தி வாட்ஸ் அப் கணக்குகள்
தம்பதி அனுப்பியதாகக் கூறப்படும் இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்தபடியே வாட்ஸ் அப் கணக்குகள் உருவாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த எண்களை பயன்படுத்தி இந்திய வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து, அங்கிருந்து பல்வேறு தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணுவ முகாம்களை கண்காணிக்க திட்டமா?
கைது செய்யப்பட்ட தம்பதிக்கு இந்திய ராணுவப் படை முகாம்களை கண்காணிப்பது, ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் ராணுவ வீரர்களின் விவரங்களைச் சேகரிப்பது உள்ளிட்ட பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்தியாவுக்குள் ஆட்களைச் சேர்ப்பது தொடர்பான பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தான் முகவருடன் தொடர்பு
சாஹிலும் அவரது மனைவி சமீராவும் இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தான் முகவர் ஒருவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த முகவர் மூலமாக பாகிஸ்தான் உளவு அதிகாரி ஒருவரின் அறிமுகம் தம்பதிக்கு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், பண ஆசை காட்டி தம்பதியை உளவு வலையில் சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கக்கூடிய உதவியாளர்களைச் சேர்ப்பதற்கான பணியும் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
8 இந்திய சிம் கார்டுகள்; ரூ.30,000 பணப் பரிமாற்றம்
கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் 8 இந்திய சிம் கார்டுகளை துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும், இதற்காக ரூ.30,000 பணம் பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தம்பதி கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பெரிய அளவிலான உளவுச் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
