Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவுக்கு கூடுதல் உர விநியோகம்: ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்க்கோவில் உயமட்ட...

இந்தியாவுக்கு கூடுதல் உர விநியோகம்: ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்க்கோவில் உயமட்ட பேச்சுவார்த்தை!

-

- Advertisement -

இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மாஸ்கோவிலிருந்து இந்தியாவில் உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார். மாஸ்க்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.

we-r-hiring

உர விநியோகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு:

அதிகரித்து வரும் உலகளாவிய சவால்கள் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடிகளுக்கு இடையே, இந்தியாவுக்குத் தடையற்ற எரிசக்தி மற்றும் உர விநியோகம் வழங்குவதை ரஷ்யா உறுதி செய்யும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சந்திப்பின்போது பேசிய புதின், “இந்திய விவசாயிகளின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். உர விநியோகத்தை அதிகரித்து வருவதுடன், எதிர்காத்திலும் அதனைத் தொடர முழுத் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டதாக ரஷ்யாவின் தாஸ் (TASS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் வலுவடைந்து வருவதாகவும், குறிப்பாக இந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாகவும் புதின் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வர்த்தக உறவுகள் மற்றும் ஜெய்சங்கரின் பயணம்:

இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்யாவின் முதன்மை துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவுடன் இணைந்து 27-வது இந்தியா-ரஷ்யா அரசரிடையேயான வர்த்தக, பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டத்திற்கு (IRIGC-TEC) தலைமை தாங்கினார்.

இதனைத் தொடர்ந்து அதிபர் புதினைச் சந்தித்த ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் நல்வாழ்த்துகளையும் தனிப்பட்டச் செய்தியையும் அவரிடம் கையளித்தார். மேலும், அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளதையும், எரிசக்தி, அணுசக்தி, மற்றும் உரம் உள்ளிட்ட பல துறைகளில் கூட்டுறவு ஆழமடைந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

வர்த்தக பற்றாக்குறைக்கு தீர்வு:

இருப்பினும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் காணப்படும் பற்றாக்குறையைக் களைவது தங்களின் தற்போதைய முதன்மையான முன்னுரிமை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். சந்தை அணுகல், கட்டணத் தடைகளை நீக்குதல் மற்றும் வலுவான பணப் பரிமாற்ற வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் 2030-க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, வரவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடுகள் குறித்தும், இரு நாட்டுத் தலைவர்களின் எதிர்காலப் பயணத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“டிஜிட்டல் பணமழையில் இந்தியா!” – ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.. NPCI அதிரடி தகவல்!

MUST READ