நாடு முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள் கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீவிர கவலை
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தொடர்ந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இது மிகவும் கவலைக்குரிய நிலை. சட்டம் ஒழுங்கு இயந்திரத்தின் பொறுப்பில் உள்ள இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி வருகிறது” என வருத்தம் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சர்வதேச எல்லைகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நடைபெறும் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் குறித்துக் கவலை தெரிவித்தார்.
மனுதாரரின் முக்கியக் கோரிக்கைகள்
இளைஞர்களின் உடல்நலனைப் பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கும் இடையிலான தொடர்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் பின்வரும் சீர்திருத்தங்களைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது:
தடயவியல் அறிக்கை: போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளில் (NDPS Act) தடயவியல் அறிவியல் ஆய்வகங்களின் (FSL) அறிக்கைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஒரே மாதிரியான நடைமுறை: சிறிய மற்றும் இடைநிலை அளவிலான போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளில் சோதனை, பறிமுதல் மற்றும் மாதிரி சேகரிப்புக்கு ஒரே மாதிரியான நிலையான நடைமுறை விதிமுறைகளை (SOP) உருவாக்க வேண்டும்.
நிபுணர் குழு: புதிதாக உருவாகும் மனநிலை மாற்றும் பொருட்களை விரைவாக அடையாளம் கண்டு, அவற்றைச் சட்டத்தின் கீழ் பட்டியலிட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.
விரைவான விசாரணை: போதைப்பொருள் வழக்குகளில் விசாரணையைக் காலக்கெடுவுக்குள் முடித்து, விரைவான விசாரணையை உறுதி செய்யத் தனி SOP உருவாக்க வேண்டும்.
சொத்து முடக்கம்: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களுக்கு நிதியளிப்பவர்களின் சொத்துகளை விரைவாகப் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுதாரரின் வாதங்களைக் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கினை ஒத்திவைத்தது.
