தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.


நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து
திங்கள்கிழமை இரவு தாமதமாக, சுமார் 11.40 மணி முதல் 11.50 மணியளவில் SNCU பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, ஏசி யூனிட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து தீ மற்றும் அதிகளவு புகை வார்டு முழுவதும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மீட்பு
சம்பவம் நடைபெற்றபோது SNCU பிரிவில் சுமார் 27 முதல் 30 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ மற்றும் புகை பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குழந்தைகளை வெளியேற்றி, அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் வார்டுகளுக்கு மாற்றினர். சில குழந்தைகள் அடிலாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், சிலர் நிஜாமாபாத்துக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழப்பு 3 ஆக உயர்வு
ஆரம்பத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு 20 நாள் குழந்தை நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த தீ விபத்தில் உயிரிழந்த பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம் குறித்து விசாரணை
ஏசி வெடிப்பு மற்றும் மின்கசிவு தொடர்பான முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தீ விபத்துக்கான முழுமையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
மின்சார அமைப்பு, ஏசி சாதனங்கள் மற்றும் மருத்துவமனையின் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவு
இந்த சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அவர், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீ மற்றும் மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பகீர்! மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை சுட்டுக்கொலை
