ரயில் டிக்கெட்டுகளை UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ₹2,000-க்கு மேல் மதிப்புள்ள ரயில் டிக்கெட்டுகளுக்கான UPI பரிவர்த்தனையில் ₹5 Merchant Discount Rate (MDR) விதிக்கப்படும் என்றாலும், அந்தத் தொகையை பயணிகள் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 15 முதல் புதிய UPI கட்டமைப்பு
புதிய UPI கட்டமைப்பு அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, குறிப்பிட்ட வணிகர்களிடம் ₹2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR விதிக்கப்படும்.
ஆனால் ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் வேளாண் உள்ளீடுகள் போன்ற அத்தியாவசிய மற்றும் குறைந்த லாப வரம்புள்ள துறைகளுக்கு தனி கட்டண முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளில் ₹2,000-க்கு மேல் நடைபெறும் UPI பரிவர்த்தனைகளுக்கு ₹5 என்ற நிலையான MDR வசூலிக்கப்படும்.
ரயில் பயணிகள் ₹5 செலுத்த வேண்டுமா?
இதுதான் பயணிகளிடையே ஏற்பட்டுள்ள முக்கிய குழப்பமாகும். ரயில் டிக்கெட்டுக்காக ₹2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தும்போது ₹5 MDR விதிக்கப்பட்டாலும், அந்தக் கட்டணத்தை பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்க முடியாது.
ரயில்வே தரப்பே இந்த MDR-ஐ ஏற்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ₹2,500 மதிப்புள்ள ரயில் டிக்கெட்டுக்கு UPI மூலம் பணம் செலுத்தும் பயணி, ₹2,505 செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.
₹2,000-க்கு கீழ் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை
புதிய விதிகளின்படி ₹2,000-க்கு குறைவான UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR விதிக்கப்படாது. அதேபோல், தனிநபரிடம் இருந்து தனிநபருக்கு மேற்கொள்ளப்படும் UPI பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.
மத்திய நிதி அமைச்சகத்தின் விளக்கத்தின்படி, மொத்த UPI பரிவர்த்தனைகளில் சுமார் 96 சதவீத வணிகப் பரிவர்த்தனைகள் புதிய MDR விதிகளால் பாதிக்கப்படாது.
பயணிகளுக்கு கூடுதல் சுமை இல்லை
MDR என்பது வணிகர்களுக்கும் பணம் செலுத்தும் அமைப்பில் உள்ள வங்கிகள், payment service providers மற்றும் UPI செயலி நிறுவனங்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்களுக்கும் இடையிலான கட்டணமாகும். இது அரசு அல்லது NPCI நேரடியாக வசூலிக்கும் வரி அல்ல என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, ரயில் டிக்கெட் முன்பதிவின்போது UPI மூலம் ₹2,000-க்கு மேல் செலுத்தும் பயணிகள், புதிய விதியின் காரணமாக கூடுதலாக ₹5 செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
