தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி தருவதாகக் கூறிவிட்டு தற்போது ஊழலுக்கு வித்திட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியா, முதல்வர் அலுவலகப் புதுப்பிப்புப் பணிகள் மற்றும் அதுதொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.


செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆசிர்வாதம் ஆச்சாரியா தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
ஒப்பந்தத்தில் முறைகேடு புகார்: “நூறு நாட்களில் ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை வழங்குவேன் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால், தற்போது அவரது அலுவலகத்தைத் தரம் உயர்த்தும் பணிகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன. சுமார் ₹5 கோடியே 54 லட்சம் மதிப்பில் முதல்வர் அலுவலகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதப் பணிகள் ஏற்கனவே ‘மாணிக்கம் அண்ட் கம்பெனி’ என்ற நிறுவனத்தால் முடிக்கப்பட்டுவிட்டன.
விடையளிக்க வேண்டிய கேள்விகள்: 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த பிறகு எவ்வாறு புதிய ஒப்பந்தம் கோர முடியும்? குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் செப்டம்பர் மாதத்துடன் முடியவிருக்கும் நிலையில், அதற்கு முன்னரே இந்த நிறுவனத்தை எவ்வாறு பணியில் சேர்க்க முடிந்தது? எந்த அடிப்படையில் இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்த முறை வழங்கப்பட்டது என்பது குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஜோதிடரின் அறிவுரையா?: மக்கள் வரிப் பணத்தை முதல்வர் தனது அலுவலகத்தைத் தரம் மாற்றவும் இடமாற்றம் செய்யவும் தவறாகப் பயன்படுத்துகிறார். சில ஜோதிடர்களின் அறிவுரைப்படிதான் முதல்வர் அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. ஒரு ஜோதிடரை நம்பித்தான் ஆட்சி நடத்த வேண்டுமா?
கண்டனம் மற்றும் கோரிக்கை: ஊழல் முறையில் நடைபெற்றுள்ள இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவெகா சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, ஊழலில் ஈடுபட்டால் அவர்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் ஒரு புற்றுநோய் போன்றது. மக்கள் வரிப் பணத்தை முதல்வர் அலுவலகத்தைப் புதுப்பிக்கப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சுதந்திரத்திற்குப் பிறகு எந்தவொரு முதலமைச்சரும் செய்யாதவிதமாக அலுவலகத்தை மாற்றியமைக்க என்ன அவசியம் ஏற்பட்டது? இதுகுறித்த அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
