
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டி, லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் (Lord’s) மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று இரவு 8:00 மணிக்கு (உள்ளூர் நேரம் பிற்பகல் 3:30 மணி) நடைபெறுகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

அசுர பலத்தில் இரு அணிகள் :
இந்தத் தொடரில் இரண்டு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல், அசுர பலத்துடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.
ஆஸ்திரேலியா: மகளிர் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் ஆஸ்திரேலியா, ஏற்கனவே 6 முறை டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இம்முறை 7-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற சோஃபி மோலினக்ஸ் (Sophie Molineux) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தீவிரமாக உள்ளது. ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) இந்தத் தொடரில் அந்த அணியின் முக்கிய பலமாகத் திகழ்கிறார். அரையிறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து: சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி, நாட் ஸ்கிவர்-பிரண்ட் (Nat Sciver-Brunt) தலைமையில் களம் காண்கிறது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் அவர்கள் களமிறங்குகிறார்கள். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த டானி வியாட்-ஹாட்ஜ் (Danni Wyatt-Hodge) மற்றும் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் சோஃபி எக்லெஸ்டோன் (Sophie Ecclestone) ஆகியோர் இங்கிலாந்தின் மிகப்பெரிய தூண்களாக இருக்கிறார்கள்.
இன்று இரவு லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் மகளிர் இறுதிப் போட்டியில், பலப்பரீட்சை நடத்தவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
