நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஆடவர் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான விளையாட்டு உறவுகளின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ‘செஞ்சுரி ஆஃப் ஸ்போர்ட்டிங் யூனிட்டி’ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. முதல் போட்டி நவம்பர் 19-ம் தேதி ஆக்லாந்தில் உள்ள லாயிட் எல்ஸ்மோர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பாதியில் சமநிலை
போட்டியின் 25-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஜான்டி எல்ம்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே நிமிடத்தில் இந்திய வீரர் உத்தம் சிங் ஃபீல்டு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
இரண்டாவது பாதியில் இந்தியா ஆதிக்கம்
ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஷர்தானந்த் திவாரி ஃபீல்டு கோல் அடித்து இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 43-வது நிமிடத்தில் கேப்டன் சஞ்சய் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க, இந்தியாவின் முன்னிலை 3-1 என உயர்ந்தது.
இதற்கிடையே 55-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் சாம் ஹிஹா கோல் அடித்து இடைவெளியைக் குறைத்தார். இதனால் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்திய வீரர்கள் தொடர்ந்து தற்காப்பில் சிறப்பாகச் செயல்பட்டு நியூசிலாந்தின் சமன் செய்யும் முயற்சிகளைத் தடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டி எப்போது?
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி நவம்பர் 21-ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நவம்பர் 22-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
1926-ம் ஆண்டு இந்திய ராணுவ ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரலாற்றை நினைவுகூரும் வகையில், இரு நாடுகளுக்கு இடையிலான 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.
மாஸ்டர்ஸ் கோல்ஃப் 2026: யுவராஜ் சிங் அபார ஆட்டம்! முதலிடத்தில் மூன்று வீரர்கள் சமநிலை!
