பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிலை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மனுதாரர்களின் கோரிக்கை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பழனி மடம் நிலப் பத்திரப்பதிவு மோசடி விவகாரத்தை மாநில சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் உண்மைத் தன்மை வெளியே வராது. எனவே, இதுவரை சிபிசிஐடி நடத்திய விசாரணை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்; இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் கோரியிருந்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் வாதங்கள், இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணையின் நிலை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டதுடன், மனுதாரர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர் மாரிஸ் குமார் ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், நிலை அறிக்கை விவரங்கள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நீதிமன்றம் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யச் சொல்லவில்லை ஆனால் சிபிசிஐடி போலீசார் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்திருப்பது ஏற்புடையதல்ல என வாதிட்டனர்.
இதற்குப் பதிலளித்த சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர், “வழக்கின் சில ரகசியத் தகவல்களைப் பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்பதும், அது விசாரணையைப் பாதிக்கும் என்பதால் மட்டுமே நீதிபதிகளுக்குச் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
வழக்கு ஒத்திவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை மனுதாரர் தரப்பில் வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கறிஞர்கள் வாதிடலாம். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரிக்கலாமா அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்துகொள்ளும் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பில் விரிவான வாதங்களை முன்வைப்பதற்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
