தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் சற்று குறைந்துள்ளது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது இல்லத்தரசிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதம்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

அந்த வகையில், நடப்பு மாதத்திற்கான புதிய விலைப்பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
வணிக சிலிண்டர் விலை சரிவு : ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை இந்த மாதம் அதிரடியாக ரூபாய் 172.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 3,106 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
அதே நேரத்தில், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் இந்த மாதமும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வழக்கம் போல 957.50 ரூபாய்க்கே வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டரைப் போல வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் குறையும் என்று எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளதால், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை ஓரளவிற்கு கட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளதாக நுகர்வோர்கள் கருதுகின்றனர்.
