போதைப்பொருளுக்கு எதிராக 12 ஆயிரம் வழக்குகள் பதிவு; 18 ஆயிரம் பேர் கைது – மெரினாவில் தேசிய மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்கம்!
தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 ஆயிரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், 23 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 12 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மெரினாவில் தேசிய மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்கம்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னைக் கடற்கரை மெரினாவில் தேசிய மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியைத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும் படைத்தலைவருமான மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் தொடங்கி வைத்தார்.
தமிழக காவல்துறை, புதுச்சேரி காவல்துறை, அந்தமான் நிக்கோபார் காவல்துறை மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) ஆகியவற்றின் சார்பில் தலா ஐந்து இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 20 இருசக்கர வாகனங்களில் காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் தொடங்கியுள்ள இந்தப் பேரணி, 14 நாட்களில் சுமார் 1,810 கிலோமீட்டர் பயணித்து ஆறு மாநிலங்களைக் கடந்து குஜராத்தின் ஏக்தா நகரைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பிரச்சினை நாடு முழுவதும் பெரும் சவால்
நிகழ்ச்சியில் பேசிய போதைப்பொருள் தடுப்பு மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர் சங்கர் ஐபிஎஸ், போதைப்பொருள் பிரச்சினை ஒரு மாநிலத்துக்கு மட்டுமானது அல்ல; நாடு முழுவதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு மத்திய அளவிலும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பிரிவின் கீழ் 67 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, 2,500 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.265 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
23 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்
தொடர்ந்து பேசிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதுடன், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்குக்கும் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் தொடர்பாக 12 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 23 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 12 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கஞ்சா பெருமளவில் ஒடிசா மாநிலத்தில் இருந்து வருவதாகத் தெரிவித்த அவர், அதன் வழித்தடங்களைக் கண்டறிந்து காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆண்டைவிட 12 மடங்கு அதிகமாக போதை மாத்திரைகள் பறிமுதல்
கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 12 லட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்தார்.
பறிமுதல் எண்ணிக்கை 12 மடங்கு அதிகரித்துள்ளதால், போதைப்பொருள் பயன்பாடு அதே அளவுக்கு அதிகரித்துவிட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது என்றும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிரமாகச் செயல்படுவதால் அதிக அளவில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனக்கு வேண்டாம்; நமக்கு வேண்டாம்” – விழிப்புணர்வு முழக்கம்
பேரணியில் பங்கேற்றுள்ள காவல்துறையினர், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று டிஜிபி வலியுறுத்தினார். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வையும் உறுதிமொழியையும் பரப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“எனக்கு வேண்டாம்; நமக்கு வேண்டாம்” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்தப் பேரணி, இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போதைப்பொருளுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.
