தமிழ்நாட்டில் வளர்ச்சி என்ற போர்வையில் விவசாய நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தங்கள் மற்றும் அரசாணைகளுக்கு எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாய நில உரிமைக்கு அச்சுறுத்தல்
இது தொடர்பாக எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வளர்ச்சி என்ற போர்வையில் வேளாண் நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு மிக எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையிலான அரசின் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்ட அரசாணை ஆகியவை தமிழ்நாடு வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களின் நில உரிமைக்கும் நேரடியாக விடப்பட்ட அச்சுறுத்தல் என்று அவர் சாடியுள்ளார்.
உள்ளாட்சி சுயாட்சி சீர்குலைவு
மேலும், இந்தச் சட்டத் திருத்தங்கள் விவசாயத் துறையின் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களையும் உரிமைகளையும் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உள்ளாட்சிகளின் அதிகார நிலையை உறுதிசெய்யவும், இந்தச் சட்டத்திருத்தங்களையும் அரசாணைகளையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
