Homeசெய்திகள்தமிழ்நாடு“எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்; நீங்கள் தீர்மானிக்க முடியாது!” – எலான் மஸ்க்குக்கு கமல்ஹாசன் பதிலடி

“எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்; நீங்கள் தீர்மானிக்க முடியாது!” – எலான் மஸ்க்குக்கு கமல்ஹாசன் பதிலடி

-

- Advertisement -

இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டின் கொள்கைகளையும் எந்தவொரு கோடீஸ்வரரும் தீர்மானிக்க முடியாது என்று நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

we-r-hiring

ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள் வழியாக இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயல்படுவதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், சில பெரும் தொழிலதிபர்கள் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பற்றியும் தனது எக்ஸ் தளப் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையே, இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அனுமதி நடைமுறைகள் நியாயமானதாகவும், பாகுபாடற்றதாகவும் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கமல்ஹாசன் வெளியிட்ட அதிரடி பதிவு!

இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியராக இருந்தாலும் அமெரிக்கராக இருந்தாலும் எந்தவொரு கோடீஸ்வரரும் ஒரு நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும், ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் தங்களது உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, மற்ற நாடுகளுக்கு மட்டும் தடையற்ற சந்தை குறித்து அறிவுரை வழங்குவது சரியல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சீன மின்சார வாகனங்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்ததையும், இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தியா ஜனநாயக நாடு; காலனி அல்ல!”

இந்தியர்கள் தங்களது நாட்டின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஜனநாயக முறையில் விவாதித்து, கேள்வி எழுப்பி, தேவையான மாற்றங்களைத் தாங்களே மேற்கொள்வார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக நாடுகளை இந்தியா வரவேற்கிறது. அதேநேரத்தில், இந்தியாவின் எதிர்காலத்தை இந்திய மக்களே தீர்மானிப்பார்கள் என்றும், மேற்கத்திய நாடுகளின் நலன்களோ அல்லது இந்திய, அமெரிக்க கோடீஸ்வரர்களோ நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு இந்தியாவில் அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரத்தில் எலான் மஸ்க் எழுப்பிய கேள்விகளும், அதற்குக் கமல்ஹாசன் அளித்துள்ள பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி சென்னை வருகை! 5 அடுக்கு பாதுகாப்பு – 22,000 போலீசார் குவிப்பு!

MUST READ