கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களும், அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களுமான இருவரைச் சென்னை தனிப்படை போலீஸார் இன்று காலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதுக்கு முன்னதாக அவர்களது குடியிருப்பில் 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கரூர் கோதை நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திமுக பிரமுகர்களான ‘சக்தி மெஸ்’ கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை இவர்களது குடியிருப்புக்குச் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து வந்த தனிப்படை போலீஸார் திடீர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரின் வீடுகளிலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவில், ரமேஷின் வீட்டில் இருந்து கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
தனிப்படை போலீஸார் அதிரடி கைது
சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ‘சக்தி மெஸ்’ கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் இன்று காலை முறைப்படி கைது செய்தனர். பின்னர், உள்ளூர் போலீஸாரின் உதவியோடு இருவரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைதின் பின்னணி என்ன? – போலீஸ் மௌனம்
இந்த அதிரடி கைது நடவடிக்கை எந்த வழக்கின் அடிப்படையில், யார் கொடுத்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களைப் போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், கரூரைச் சேர்ந்த இந்த இருவரும் பார் டெண்டர்கள் (Bar Tender) மற்றும் டாஸ்மாக் (TASMAC) அனுமதி கடிதங்கள் வழங்குவதில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டார்களா? அதன் மூலம் திமுக-விற்குப் பெருமளவில் ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) வசூலித்துக் கொடுத்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் மோசடி வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூர் மாவட்ட திமுக-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
