Homeசெய்திகள்தமிழ்நாடு"கடந்த ஆட்சியின் அறநிலையத்துறை ஊழல்: விரைவில் வெள்ளை அறிக்கை!" — திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி!

“கடந்த ஆட்சியின் அறநிலையத்துறை ஊழல்: விரைவில் வெள்ளை அறிக்கை!” — திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி!

-

- Advertisement -

இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரமேஷ்

we-r-hiring

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் திருச்சி அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

“செயலில் காட்டும் முதல்வர்”:

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தமிழக முதல்வர் விஜய் அனைத்து தலைவர்களும் பாராட்டத்தக்க வகையில் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். வாக்களிக்காதவர்கள் கூட சந்தோஷமாக வாழக்கூடிய அளவிலே ஆட்சி உள்ளது. முதல்வர் தனித்து விடப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். உண்மையிலேயே தனித்து விடப்பட்டது யார் என ஸ்டாலினிடம் கேளுங்கள். சட்டமன்றத்திலிருந்து பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின், இன்று சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய நிலைமைக்குத் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. எல்லாவற்றையும் பேசி பேசித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை; எங்களுடைய முதல்வர் செயலில் காட்டக்கூடியவர்” என்றார்.

ஸ்ரீரங்கம் கோயில் புகார் குறித்து விசாரணை:

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஆந்திரப் பெண்ணிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றதாக வந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், “அனைத்து கோயில்களிலும் ஒரு சிலரால் இதுபோன்று நடக்கிறது. விசாரணையின் அடிப்படையில் தவறுகள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

சீமானின் விமர்சனங்களுக்குப் பதில்:

“உள்ளாட்சித் தேர்தலுக்காக வெறியோடு காத்திருப்பதாக சீமான் சொல்லியிருக்கிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியிலும் சாதி பார்த்துதான் வேட்பாளரை நிறுத்தினார். வெறுப்பு அரசியல் பேசி, ஒரு தலைவருக்கு எதிராக பேசுவதை விட்டுவிட்டு, உண்மையிலேயே வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு பேசினால் உள்ளாட்சித் தேர்தலில் ஓரிரு இடங்களில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை அவர் முயற்சி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தடுப்பணை திட்டங்கள் & செந்தில் பாலாஜி விவகாரம்:

காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பான கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆய்வு நடத்தி வருவதாகவும், நிதிநிலையைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஒளியவில்லை என்றால் இத்தனை நாள் எங்கிருந்தார்? நீதிமன்ற நடைமுறைகளை தைரியமாக எதிர்கொண்டு நின்று இருக்க வேண்டியதுதானே? இந்த ஆட்சியைப் பொறுத்தவரை எங்கள் தலைவர் சொன்னது போல நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம். செந்தில் பாலாஜி நிச்சயமாக தண்டிக்கப்படுவார்” எனக் கூறினார்.

அறநிலையத்துறை ஊழல் குறித்த வெள்ளை அறிக்கை:

“இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் என்னென்ன கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன, என்னென்ன தவறுகள் நடந்திருக்கின்றன என அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கவனித்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரை நிச்சயமாக ஊழலை ஒழிப்போம். கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைக் கண்டறியவும் தனித்தனி குழுக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. தொடர் நடவடிக்கையின் பலனை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்” என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.

MUST READ