ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி உற்பத்தி ஆண்டுக்கு 25 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இத்தொழிலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
நூற்றாண்டு கண்ட தொழிலுக்குச் சவாலாக விளங்கும் லைட்டர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: “சிவகாசியில் 1923-இல் தொடங்கப்பட்ட தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு கண்ட பாரம்பரியத் தொழிலாகும். தென் தமிழகம், குடியாத்தம், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான தொழிலாக விளங்கும் இதில், 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.

இத்தகைய பாரம்பரியமிக்கத் தொழிலுக்கு ‘ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள்’ (Single-use plastic lighters) பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இவற்றால் ஆண்டுக்கு சுமார் ₹600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.”
மத்திய அரசின் தடையைச் சமாளித்து நடக்கும் சட்டவிரோத உற்பத்தி
மத்திய அரசு ₹20-க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள போதிலும், லைட்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்கள் வேறு பெயர்களில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் குறைந்த தரத்தில் அசம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
வரி இழப்பு: இதனால் அரசுக்கு ஜி.எஸ்.டி (GST) வரியோ அல்லது அந்நியச் செலாவணியோ கிடைப்பதில்லை.
சுற்றுச்சூழல் கேடு: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் லைட்டர்களால் சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைகிறது.
ஏற்றுமதி வாய்ப்பு இழப்பு: இந்தியத் தீப்பெட்டி தொழில் மூலம் தற்போது ₹400 கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் லைட்டர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினால் ஏற்றுமதியை ₹600 கோடியாக உயர்த்த முடியும்.”ரூ.10 பிளாஸ்டிக் லைட்டர்களே எதிரி; மெட்டல் லைட்டர்கள் அல்ல”
ரூ.50-க்கு மேல் விற்பனையாகும் உலோக லைட்டர்கள் (Metal Lighters) தீப்பெட்டித் தொழிலுக்கு எந்தவிதப் போட்டியும் இல்லை என்றும், ரூ.10-க்குக் கீழ் விற்கப்படும் தரமற்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களே தீப்பெட்டித் தொழிலுக்குப் நேரடிச் சவாலாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே அந்தமான் நிகோபார் தீவுகளில் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரைச் சந்திக்க முடிவு
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான பெரும்பாலான மூலப்பொருட்களும், தொழிலாளர்களும் தமிழகத்திலேயே உள்ளதால், இத்தொழில் பாதிக்கப்பட்டால் பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும், சார்புத் தொழில்களும் முடங்கும் அபாயம் உள்ளது.
எனவே, தீப்பெட்டி தொழிலையும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் பாதுகாக்கும் பொருட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகிய மூன்றிற்கும் முற்றிலும் தடை விதிக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
