தனியார் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கு மானியம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தினர், ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தங்கராஜ், தனியார் பேருந்து துறையினர் 104 வருட காலமாக 1300 நகர பேருந்துகளையும் 3700 புறதகர் பேருந்துகளையும் 2000 உபரி மற்றும் உதவி பேருந்துகளையும் என, ஒட்டுமொத்தமாக 7000 பேருந்துகளை இயக்கி வருவதாக கூறினார்.
54 வருடங்களாக படிப்படியாக உயர்த்தி, சுமார் 19000 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை குறிப்பிட்ட அவர், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றிப் பயண திட்டத்தில் மாநகர, நகர பேருந்துகளிலும் மற்றும் சாதாரண புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதித்ததால் தமிழகத்தில் உள்ள தனியார் துறை பேருந்துகள் அனைத்தும் நஷ்டத்தில் முடங்கும் நிலை ஏற்படும் என்றார்.
தனியார் பேருந்துகளை தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் இத்தொழிலை சார்ந்துள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றிப் பயண திட்டத்தில் மாநகர, நகர பேருந்துகளிலும் மற்றும் சாதாரண புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க, பொருளாதார அடிப்படையில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களை மட்டும் அனுமதிக்க கோருவதாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் அதற்கு இழப்பீடாக தனியாருக்கும் மானியம் வழங்க கோருவதாகவும் தங்கராஜ் கேட்டுக் கொண்டார்.
வெற்றிப் பயண திட்டத்தில் ஆதார் அட்டை துணை கொண்டு பயோமெட்ரிக் அமைப்பு மூலம் வெற்றிப் பயண இலவச அட்டை என்ற பெயரில் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அதன் மூலம் இலவச பயணத்தை தொடர அறிவித்தால் வெளி மாநில பெண்கள், வெளி மாநில பேருந்துகளில் வரும் பயணிகள் மற்றும் உயர் வகுப்பு பெண்கள் இதை பயன்படுத்தாமல் தடுத்து வருவாய் இழப்பை தவிர்க்கலாம் என அவர் கருத்துத் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தனியார் பேருந்துகள், 29-ம் தேதி நள்ளிரவில் இருந்து 30 ம் தேதி நள்ளிரவு வரை ஒருநாள் இயங்காது என்றும்தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தங்கராஜ் அறிவித்தார்.
