முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிட வெற்றி கழகத்தின் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய மல்லை சத்யா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


”பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள்!”
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லை சத்யா, “கடந்த ஆண்டு நான் சொன்னது போலவே, துரை வைகோ பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ போலச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலின் போது, பாஜக உறுப்பினரின் கையெழுத்தைப் பெற்ற விவகாரத்தை மறைத்தது ஏன்? தங்கள் சுயநலத்திற்காகத் தேர்தல் காலத்தில் பொய்யான ஊர்வலங்களை நடத்துவதும், பாஜகவிற்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடிப்பதும் திராவிட இயக்கத்திற்குச் செய்யும் துரோகம்” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்காகப் போராடியவர்களாக அறியப்பட்ட வைகோவும், அவரது மகன் துரை வைகோவும், இன்று அந்த இயக்கத்தையே சிதைக்கும் ‘கோடாரிக் காம்புகளாக’ மாறிப் போனது துரதிர்ஷ்டவசமானது” என்று காட்டமாக விமர்சித்தார்.
கலைஞரின் இமாலய சாதனைகள்!
இந்த விவாதங்களுக்கு இடையே, கலைஞர் அவர்களின் சாதனைகளைப் போற்றிப் பேசிய மல்லை சத்யா, “கலைஞர் விட்டுச் சென்ற இடத்தைப் பூர்த்தி செய்ய யாராலும் முடியாது; அந்த இடத்திற்கு அவரேதான் மீண்டும் வரவேண்டும். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்த நலத்திட்டங்கள், திருவள்ளுவர் மற்றும் கண்ணகி கோட்டம் என அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை” என்று குறிப்பிட்டார்.
மேலும், “சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களே கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர். நெருக்கடி நிலையை (மிசா) எதிர்கொண்டு, ஆட்சியை இழந்தாலும் மனம் தளராமல், ‘ஊன்றுகோலை நாடாமல் எழுதுகோளை மட்டுமே துணையாகக் கொண்டு’ தமிழகத்திற்காக உழைத்தவர் அவர்” எனப் புகழ்ந்துரைத்தார்.
கலைஞர் அவர்களின் பெருமைகளைச் சுட்டிக்காட்டிய அதே வேளையில், அரசியல் களத்தில் கொள்கை மாற்றம் கொண்டவர்களைக் கடுமையாகச் சாடிய மல்லை சத்யாவின் இந்த பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
