குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்று அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் விரைவான நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா (35) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக குவைத் சென்றிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில், “என் பெயர் வனிதா. நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவள். இங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னை ஒரு அறையில் அடைத்து வைத்துச் சித்ரவதை செய்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக எனக்குச் சம்பளமும் தரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மேடம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் என்னை மீட்டு, என் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்” என அழுதுகொண்டே கோரிக்கை விடுத்திருந்தார்.
காவல்துறை அதிரடி நடவடிக்கை
இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, வனிதாவின் தாயார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்துப் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், வனிதாவை குவைத்திற்கு அனுப்பி வைத்த போலி முகவர் (Agent) மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு
தொடர்ந்து, மாநில அரசு மற்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு இச்சம்பவம் கொண்டு செல்லப்பட்டது. தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேசத் தொடர்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சியின் பலனாக, குவைத்தில் சித்ரவதையில் சிக்கியிருந்த வனிதா பத்திரமாக மீட்கப்பட்டார். தற்போது அவர் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேவையான சட்ட நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அவர் விரைவில் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
