வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த 61 வயது டோனாஜீன் வைல்ட் தொடர்ந்து 5 மணி நேரம் பிளாங்க் (Plank) உடற்பயிற்சி நிலையில் இருந்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் நடைபெற்ற ஹன்ட்ஸ்மேன் உலக சீனியர் விளையாட்டுப் போட்டிகளில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார்.


தனது முந்தைய சாதனையை முறியடித்தார்
ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான டோனாஜீன் வைல்ட், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் 11 விநாடிகள் பிளாங்க் நிலையில் இருந்து பெண்களுக்கான உலகச் சாதனையைப் படைத்திருந்தார்.
தற்போது தொடர்ந்து 5 மணி நேரம் அதே நிலையில் இருந்து தனது முந்தைய சாதனையை விட சுமார் 30 நிமிடங்கள் கூடுதலாகச் செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது புதிய சாதனைக்கான ஆதாரங்களை கின்னஸ் உலக சாதனை அமைப்பு பரிசீலித்து வருகிறது.
12 பேரக்குழந்தைகள் கொடுத்த உற்சாகம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த டோனாஜீன் வைல்டுக்கு 5 குழந்தைகளும் 12 பேரக்குழந்தைகளும் உள்ளனர். சாதனை முயற்சியின்போது அவரது குடும்பத்தினர் அளித்த ஊக்கமும், பேரக்குழந்தைகள் நேரில் வந்து உற்சாகப்படுத்தியதும் அவருக்கு உத்வேகம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-ல் தொடங்கிய உடற்பயிற்சி ஆர்வம்
டோனாஜீன் வைல்டின் பிளாங்க் பயணம் 2013-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாத நிலையில், பிளாங்க் பயிற்சியை முயற்சி செய்துள்ளார். பின்னர் அந்தப் பயிற்சியில் ஆர்வம் அதிகரித்து, உலகச் சாதனைக்காகத் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார்.
2023-ம் ஆண்டு முதல் சாதனை முயற்சிக்காகக் கூடுதல் பயிற்சிகளை மேற்கொண்ட அவர், பிளாங்க் பயிற்சியுடன் புஷ்-அப்ஸ், எடைப் பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சிகளையும் செய்துள்ளார்.
ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்-அப்ஸ்!
பிளாங்க் சாதனை மட்டுமின்றி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ்-அப்ஸ் செய்த பெண்களுக்கான சாதனையையும் டோனாஜீன் வைல்ட் வைத்துள்ளார். 2024-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்-அப்ஸ் செய்து அவர் சாதனை படைத்திருந்தார்.
61 வயதிலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து புதிய இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் அவரது முயற்சி, உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
“சிவந்த பூமி”… சூப்பர் எல் நினோவால் உலகை வாட்டப்போகும் கடும் வெப்பம்! ஐநா வானிலை அமைப்பு எச்சரிக்கை
