கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்ற 78 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டியிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.


முதலில் காலில் விழுந்து வணங்கிய பெண்
ஜூலை 28-ம் தேதி மாலை மூதாட்டி தனது வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ஒரு SUV கார் அவருக்கு அருகில் வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவர் மூதாட்டியின் அருகே சென்று, அவரது கால்களைத் தொட்டு வணங்கியதுடன், பின்னர் அவரை கட்டிப்பிடித்துள்ளார்.
ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாத அந்த மூதாட்டி, அந்தப் பெண்ணை தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் என நினைத்ததாக அவரது மகன் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகை
மூதாட்டியின் நம்பிக்கையைப் பெற்ற அந்தப் பெண், அவருக்கு தெரியாமல் கழுத்தில் இருந்த உண்மையான தங்க நெக்லஸை கழற்றியுள்ளார். அதற்கு பதிலாக தங்கம் போல தோற்றமளிக்கும் போலி நெக்லஸ் ஒன்றை அவரது கழுத்தில் அணிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், மூதாட்டி அணிந்திருந்த தங்க வளையல்களையும் அந்தப் பெண் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் காரில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளார்.
சுமார் 110 கிராம் தங்கம் மாயம்
இந்த கொள்ளையில் சுமார் 110 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாக மூதாட்டியின் மகன் தெரிவித்துள்ளார். அவற்றின் உலோக மதிப்பு சுமார் 20,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த நகைகள் வெறும் பண மதிப்புடையவை மட்டுமல்ல என்றும், 1971-ம் ஆண்டு தனது திருமணத்தின்போது கணவர் பரிசாக வழங்கியவை என்றும் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார். அவரது தந்தை 2008-ம் ஆண்டு உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தால் அதிர்ச்சியில் மூதாட்டி
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பிறகு மூதாட்டி கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். அவர் நடுங்கிய நிலையில் வீட்டுக்கு திரும்பியதாகவும், சில நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு இதயநோய் இருப்பதால், நகைகளைவிட அவரது உடல்நிலை குறித்தே தான் அதிகம் கவலைப்பட்டதாகவும் மகன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மூதாட்டி வெளியே நடைப்பயிற்சிக்கு செல்வதையும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை தீவிரம்
சம்பவத்துக்குப் பிறகு ராகவேந்திர குமார், அப்பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்கியுள்ளார்.
காட்சிகளில் இடம்பெற்றுள்ள பெண் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை நிற Chevrolet Equinox வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணை விசாரணையில் “person of interest” என போலீசார் அடையாளப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது; இதுவரை கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
