
போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமா முறிந்துவிட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் பயங்கர வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடுமையான போர் மூண்டுள்ளது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா கடுமையான வான் வழித்தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகிறது. இதனிடையே அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே 60 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தையும் மீறி இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரானில் உள்ள 170-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அசுரத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது – டிரம்ப் அதிரடி:
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மூன்று வணிகக் கப்பல்கள் (Tankers) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் ‘பயங்கரவாதச் செயல்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். “என்னைப் பொறுத்தவரை போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ஈரான் மீண்டும் கப்பல்கள் மீது தாக்கினால், நிலைமை இன்னும் மோசமாகும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானின் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மற்றும் கார்க் தீவில் உள்ள எண்ணெய் ஏற்றுமதி மையத்தைக் கைப்பற்றப் போவதாகவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் அசுரத் தாக்குதல் – ஈரான் பதிலடி:
அதிபர் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளது. ஈரானின் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் (Bushehr), கொனாரக், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய துறைமுக நகரங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹ்ரைன், குவைத், மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இவற்றை முறியடித்ததாகத் தெரிவித்துள்ளது.
கமேனியின் உடல் அடக்கம்:
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், 6 நாட்கள் ஊர்வலத்திற்குப் பிறகு நேற்று மஷாத் (Mashhad) நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத் தலத்தில் லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தருணத்தில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. “கமேனியின் மரணம் இஸ்லாமிய நாடுகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைத்துள்ளது” என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
பயங்கர அச்சத்தில் வளைகுடா நாடுகள்:
ஈரானின் இந்தத் தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜோர்டான், குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் ஈரான் செயல்படுவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் அலுவலகமும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு:
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி (LNG) எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. தற்போதைய பதற்றம் காரணமாக, இந்த வழியிலான கப்பல் போக்குவரத்து 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் போர்க்கால ஆபத்துக் கட்டணங்களை (War risk premiums) மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும், தற்போதைய பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளின் மத்தியஸ்தத்தோடு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பின்னணியில் சில தொழில்நுட்ப ரீதியான தூதரகப் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து வருகின்றன.
