செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகம் முழுவதும் வேகமெடுத்து வருகிறது. மருத்துவம், கல்வி, வங்கிச் சேவை, உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை AI தொழில்நுட்பம் மேற்கொண்டு வருகிறது. இதனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.


இந்தச் சூழலில், AI வளர்ச்சியைத் தடுக்காமல், அதன் காரணமாக ஏற்படக்கூடிய வேலை இழப்புகளில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் சீனா 18 அம்சங்களைக் கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
சீனாவின் புதிய 18 அம்சத் திட்டம்:
சீன அரசின் மாநில கவுன்சில் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அதனால் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்புப் பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AI பயன்பாட்டால் வேலை இழக்கும் அபாயம் உள்ள தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதுடன், அவர்களுக்கு மறுபயிற்சி அளித்தல், வேறு பணிகளில் அமர்த்துதல், மாற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருதல் போன்ற நடவடிக்கைகளையும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்:
வேலைவாய்ப்புகள் குறைவதைத் தடுப்பதுடன், AI தொழில்நுட்பத்தின் மூலமாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ள துறைகள் மற்றும் ஆபத்தான பணிகளில் AI பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணியாற்றும் துறைகளில் AI பயன்பாட்டை கவனத்துடன் அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் AI தொடர்பான புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பட்டதாரிகள், இளைஞர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
AI காரணமாக வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைக்கான பரிந்துரைகள் மற்றும் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும். தகுதியுள்ளவர்களுக்கு வேலையில்லாதோர் காப்பீட்டுத் தொகையும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை:
AI பயன்பாடு அதிகரிக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களின் ஊதியம், ஓய்வு, விடுமுறை மற்றும் பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்கள் தேர்வில் AI மூலம் பாகுபாடு காட்டுதல், மோசடியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் மற்றும் தனிநபர் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை இழப்பைக் கண்காணிக்க புதிய அமைப்பு:
AI தொழில்நுட்பத்தால் எந்தெந்தத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன, எந்தத் துறைகளில் வேலை இழப்பு ஏற்படுகிறது என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக வேலைவாய்ப்புத் தகவல்களை ஒருங்கிணைத்து, பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
AI துறையில் சீனாவின் அசுர வளர்ச்சி:
சீனாவில் கடந்த 2025ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் துறையின் மதிப்பு 1.2 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. அங்கு 6,200-க்கும் மேற்பட்ட AI நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருவாய் ஈட்டும் உற்பத்தி நிறுவனங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வாய்ப்புகள் உருவாக வேண்டும்; அதே நேரத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் இந்த 18 அம்சத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
