ஜப்பான் நாட்டின் அதிநவீன மின்காந்த மிதவை ரெயிலான ‘எஸ்சிமெக்லவ்’ (SCMaglev), மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தை எட்டி உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பான் ரெயில்வே நடத்திய சோதனையின்போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எஸ்சிமெக்லவ் – மின்காந்த மிதவை ரெயில்
ஜப்பானின் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எஸ்சிமெக்லவ் மிதவை ரெயில் கருதப்படுகிறது. வழக்கமான ரெயில்களைப் போல தண்டவாளத்தைத் தொட்டுச் செல்லாமல், தண்டவாளத்தில் இருந்து சுமார் 10 சென்டிமீட்டர் உயரத்தில் மிதந்தபடி இந்த ரெயில் பயணிக்கிறது.
மணிக்கு 603 கி.மீ. வேகம் – உலக சாதனை
பொதுவாக மின்சார ரெயில்கள் மேலே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்று தண்டவாளங்களில் இயங்குகின்றன. ஆனால், எஸ்சிமெக்லவ் ரெயில் முற்றிலும் மாறுபட்ட மின்காந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
ஜப்பான் ரெயில்வே நடத்திய சோதனையில் இந்த ரெயில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தை எட்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
10 செ.மீ. உயரத்தில் மிதக்கும் தொழில்நுட்பம்
இந்த ரெயிலில் சூப்பர் கண்டக்டிங் எனப்படும் மீள்கடத்தும் காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலையில் செயல்படும் இந்த காந்தங்கள் வலிமையான காந்தப்புலத்தை உருவாக்குகின்றன.
ரெயில் பாதையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மின்காந்த சுருள்களுடன் இந்த காந்தங்கள் தொடர்புகொள்வதன் மூலம் ரெயில் தண்டவாளத்தில் இருந்து சுமார் 10 சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்கிறது.
அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம்
இந்த ரெயிலை இயக்குவதற்கு நேரியல் மின்மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. பாதையில் உள்ள மின்சார சுருள்கள் உருவாக்கும் நகரும் காந்தப்புலம் ரெயிலை முன்னோக்கி உந்தி அதிக வேகத்தில் செலுத்துகிறது.
ரெயில் புறப்படும்போதும் ஆரம்ப வேகத்தை எட்டும்போதும் ரப்பர் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும் சக்கரங்கள் மேலே மடங்கி, மின்காந்த மிதவை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரெயில் தொடர்ந்து பயணிக்கிறது.
மின்காந்தவியல், மீள்கடத்தும் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களும் பொறியாளர்களும் இந்த மிதவை ரெயிலை உருவாக்கியுள்ளனர். எதிர்கால அதிவேக போக்குவரத்துத் துறையில் இந்தத் தொழில்நுட்பம் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
விண்வெளியில் பிரமாண்ட ஏ.ஐ. தரவு மையம்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி!
