Homeசெய்திகள்உலகம்டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும்: ஜனநாயகக் கட்சி எம்.பி. கிரேஸ்...

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும்: ஜனநாயகக் கட்சி எம்.பி. கிரேஸ் மெங் நம்பிக்கை!

-

- Advertisement -

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது மேற்கொண்டு வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் சிறு வணிகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதிய வரி விதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்பட்ட சில வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், மாற்று சட்ட வழிமுறைகள் மூலம் புதிய வரி நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் வெற்றி: டிரம்புக்கு பின்னடைவா?

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற ஆசிய பசிபிக் அமெரிக்கக் குழுவின் (CAPAC) தலைவரான கிரேஸ் மெங், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தங்கள் குழு முயற்சி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

30 லட்சம் ஆசிய அமெரிக்கர்களின் வணிகங்கள் பாதிப்பு

டிரம்பின் வர்த்தகப் போர்கள் அமெரிக்காவில் உள்ள சுமார் 30 லட்சம் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகளுக்குச் சொந்தமான நிறுவனங்களை கடுமையாகப் பாதித்துள்ளதாக கிரேஸ் மெங் தெரிவித்துள்ளார்.

அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் மீதான வரிகள், குடும்பங்கள், நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு கூடுதல் செலவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை

இதுகுறித்து கிரேஸ் மெங் கூறுகையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற ஆசிய பசிபிக் அமெரிக்கக் குழுவின் உறுப்பினர்கள், அமெரிக்க அரசியலமைப்பின் முதல் பிரிவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மீட்டெடுக்கப் பாடுபடுவார்கள் என்றார்.

மேலும், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுகளை அதிகரிக்கும் இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், டிரம்பின் வரி விதிப்புகள் அடுத்த ஆண்டு முழுமையாக முடிவுக்கு வருவது உறுதியாகவில்லை. அதற்கான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை தெரியவரும்.

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு மீண்டும் வரி உயர்வு? டிரம்ப் அரசின் அதிரடி திட்டம் – ஏற்றுமதித் துறைக்கு புதிய சிக்கல்!

MUST READ