சீனாவில் வெளிநாட்டு உளவு அமைப்புக்காகப் பணியாற்றி, நாட்டின் ரகசியத் தகவல்களை கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய ரகசியப் பாதுகாப்பு நிர்வாகத்துடன் தொடர்புடைய அரசு ஊடகத் தகவலின்படி, ‘மா’ என்ற குடும்பப் பெயரால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட அந்த அதிகாரி, வெளிநாட்டில் பணியாற்றியபோது அந்நாட்டு உளவு அமைப்பால் அணுகப்பட்டு, உளவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் சீனாவுக்குத் திரும்பிய பிறகும் தொடர்ந்து ரகசியத் தகவல்களை வெளிநாட்டு உளவு அமைப்புக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்ற இந்த நடவடிக்கையில், 100-க்கும் மேற்பட்ட உளவுத் தகவல்களை அவர் வழங்கியதாகவும், அவற்றில் 35 தகவல்கள் நாட்டின் ரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை வழங்கியதற்காக அவருக்கு 10 லட்சம் யுவானுக்கும் (சுமார் 1.5 லட்சம் அமெரிக்க டாலர்) அதிகமான தொகை கிடைத்ததாகவும் சீன அரசு சார்ந்த வெளியீடு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், அந்த அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவரது தனிப்பட்ட சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், அவர் எந்தத் துறையில் பணியாற்றினார், எந்த நாட்டின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்தார், எந்த நீதிமன்றம் தண்டனை வழங்கியது, தண்டனை நிறைவேற்றப்பட்டதா போன்ற விவரங்களை சீன அரசு வெளியிடவில்லை.
சீனாவில் தேசியப் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தகவல்கள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
