Homeசெய்திகள்உலகம்இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!

-

- Advertisement -

இந்தியா உட்பட 14 நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உற்பத்தித் துறையில் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறனை உருவாக்குவதாகக் கூறி, இந்த நடவடிக்கையை அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தலைமையிலான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் அலுவலகம் (USTR), 1974-ம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா, சீனா, வங்கதேசம், கம்போடியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 14 நாடுகள் மற்றும் பொருளாதாரக் கூட்டமைப்புகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் தொழில்துறை கொள்கைகள், மானியங்கள், தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் உள்ளிட்டவற்றின் மூலம் சந்தைத் தேவையைவிட அதிகமாக உற்பத்தி செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

குறிப்பாக, எஃகு, அலுமினியம், வாகனங்கள், பேட்டரிகள், ரசாயனப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், குறைக்கடத்திகள், சூரிய மின்சக்தி உபகரணங்கள், கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் இந்த விசாரணையில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையை விரிவுபடுத்தும் தொழில் கொள்கைகள், தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள், சந்தை அணுகலில் உள்ள தடைகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா தனது குற்றச்சாட்டுகளாக முன்வைத்துள்ளது.

இந்தியப் பொருள்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு, விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களுக்கு தீர்வு காணப்பட்டால், இந்த வரியை 17 சதவீதமாகக் குறைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பொருள்களுக்கு 20 சதவீதம் வரியும், வங்கதேசம், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு 18 சதவீதம் வரியும் முன்மொழியப்பட்டுள்ளன. சில பொருள்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட உள்ளது.

இருப்பினும், இந்த வரி விதிப்புகள் தற்போது முன்மொழிவு நிலையிலேயே உள்ளன. பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

2027-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வரை கருத்துகளைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 25-ம் தேதி முதல் பொதுவிசாரணைகளும் நடைபெற உள்ளன.

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அமெரிக்காவின் இறுதி அறிவிப்பை சர்வதேச வர்த்தக வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய ஈரான் பெண் பாடகிக்கு 74 கசையடிகள் தண்டனை!

MUST READ