ஈரானில் கட்டாய ஹிஜாப் விதிகளை மீறி, ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய பெண் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு 74 கசையடிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நான்கு பேருக்கும் தலா 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

29 வயதான பரஸ்தூ அஹ்மதி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானின் கோம் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது அவர் ஹிஜாப் அணியாமல், கைப்பகுதி தெரியும்படியான ஆடையுடன் பாடல் பாடியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் காணொளி அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது.
ஈரானில் பெண்கள் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. மேலும், பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியதாகக் கூறி பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றம் விதித்த தண்டனை
இந்த வழக்கை விசாரித்த கோம் நகர நீதிமன்றம், இணையத்தில் ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தை வெளியிட்டதாகக் கூறி பரஸ்தூ அஹ்மதி உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்தது. இதன்படி, அவருக்கு 74 கசையடிகள் வழங்கவும், இரண்டு ஆண்டுகளுக்கு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடத் தடை விதிக்கவும், வெளிநாடு செல்லத் தடை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நவம்பர் 23-ஆம் தேதி பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த நான்கு ஆண்களுக்கு தலா 74 கசையடிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவர்களது வழக்கறிஞரை மேற்கோள் காட்டி ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச அளவில் கண்டனம்
பெண் பாடகிக்கு கசையடிகள் வழங்கப்பட்ட சம்பவத்துக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கசையடிகள் வழங்குவது மனிதாபிமானமற்ற தண்டனை என்றும், சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் விதிகளை மீறியதாகக் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் போராட்டங்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பெண்களின் ஆடைச் சுதந்திரம் மற்றும் கட்டாய ஹிஜாப் சட்டம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியதற்காக பெண் பாடகிக்கு கசையடிகள் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் ஈரானின் பெண்கள் உரிமை மற்றும் கலைச் சுதந்திரம் குறித்த சர்வதேச விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
