Homeசெய்திகள்உலகம்இந்திய பொருட்களுக்கு ஏற்றுமதி வரி: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய திட்டமும், பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையும்!

இந்திய பொருட்களுக்கு ஏற்றுமதி வரி: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய திட்டமும், பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையும்!

-

- Advertisement -

இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், சர்வதேச வர்த்தக வட்டாரத்திலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரமே வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிரிவு 301’ விசாரணையும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கணக்கும்

அரசு மானியங்கள் மற்றும் குறைந்த வட்டிக் கடன்கள் மூலம் பல நாடுகள் தங்கள் உள்நாட்டுத் தேவையைவிட அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றைக் குறைந்த விலையில் அமெரிக்கச் சந்தையில் குவிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR), 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் ‘பிரிவு 301’ (Section 301) கீழ் கடந்த மார்ச் 11, 2026 அன்று விசாரணையைத் தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அதிபர் தன்னிச்சையாக வரி விதிக்க முடியாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் முந்தைய வரிகளை ரத்து செய்தது. இதற்குப் பதிலடியாக, நாடாளுமன்றத்தால் வெளிப்படையாக வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்ட ‘பிரிவு 301’ சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.

சட்டப்பூர்வ விசாரணையின் அடிப்படையில் வரி விதித்தால், நீதிமன்றங்களால் அவற்றை எளிதில் ரத்து செய்ய முடியாது என்பதே இதன் பின்னணியில் உள்ள கணக்காகப் பார்க்கப்படுகிறது.

இந்தியப் பொருட்களுக்கு 30% முதல் 40% வரை வரிச்சுமை அபாயம்?

சீனப் பொருட்களுக்கு மிகக் கடுமையான வரிகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா மற்றும் வியட்நாமுக்கு அதிக வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியப் பொருட்களுக்கு 15% முதல் 25% வரை புதிய வரி விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள அடிப்படை வரிகள் மற்றும் கடந்த ஜூலை மாதம் விதிக்கப்பட்ட 10% கட்டாயத் தொழிலாளர் வரியுடன் புதிய வரிகளும் இணைந்தால், இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரிச்சுமை 30% முதல் 40% வரை உயரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

மேலும், தொடக்கத்தில் குறைந்த வரியை விதித்துவிட்டு, உற்பத்திக் கொள்கைகளை மாற்றாவிட்டால் படிப்படியாக வரிகளை உயர்த்தும் விதிகளையும் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்படக்கூடிய முக்கியத் தொழில் துறைகள்

எஃகு, அலுமினியம், வாகனங்கள், பேட்டரிகள், மின்னணுப் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட சுமார் 21 உற்பத்தித் துறைகளில் உள்ள உபரி உற்பத்தி குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தியுள்ளது.

எஃகு மற்றும் பொறியியல் துறை:

இந்திய எஃகுத் துறையில் உபரி உற்பத்தி இருப்பதாக USTR ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. அடிப்படை மூலப்பொருளான எஃகு மீதான வரி உயர்வு, புனே, குஜராத் மற்றும் சென்னை உள்ளிட்ட தொழில் வழித்தடங்களில் இருந்து ஏற்றுமதியாகும் வாகன உதிரிபாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்கக்கூடும்.

மின்னணுப் பொருட்கள் மற்றும் சோலார் துறை:

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மின்னணு இயந்திரங்கள் முதலிடத்தில் உள்ளன. ஜூலை மாதம் விதிக்கப்பட்ட 10% வரியிலிருந்து ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், உபரி உற்பத்தி விசாரணையில் மின்னணுப் பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் இடம்பெற்றுள்ளதால், அந்தச் சலுகை பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.

அதேபோல், பசுமை எரிசக்தித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சோலார் மாடியூல்கள் மற்றும் பேட்டரிகளும் அமெரிக்காவின் கவனத்தில் உள்ளன.

ரசாயனத் துறை:

ரசாயனப் பொருட்கள் மீதான வரி உயர்வு, இந்திய ஏற்றுமதியாளர்களின் லாப வரம்பைக் குறைக்கக்கூடும்.

மருந்துத் துறைக்கு ஆறுதல்:

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பிரிவான பொதுப் பயன்பாட்டு மருந்துகள் (Generic Pharmaceuticals), இந்த 21 துறைகளின் பட்டியலிலும் முந்தைய ஜூலை மாத வரிவிதிப்பிலும் இடம்பெறாதது இந்திய மருந்துத் துறைக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

அமலாக்கக் காலக்கெடுவும் அரசியல் நகர்வுகளும்

மார்ச் 11, 2026-இல் தொடங்கப்பட்ட இந்த விசாரணையில், 12 மாதங்களுக்குள், அதாவது மார்ச் 11, 2027-க்குள் USTR தனது முடிவை வெளியிட வேண்டும்.

முதலில் விசாரணை அறிக்கையும் உத்தேச வரிகளும் வெளியிடப்பட்டு, மற்றொரு சுற்றுப் பொது விசாரணைக்குப் பிறகு சுமார் 45 நாட்களில் இறுதி வரிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ள நிலையில், புதிய வரிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முக்கிய நாடாளுமன்றக் குழுக்களில் ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்புகள் உருவாகும் சூழலில், விசாரணை நடத்துவது மற்றும் மசோதாக்களைக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். இருப்பினும், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை முறியடிக்க இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதாலும், உள்நாட்டுத் தொழிலாளர் நலன் மற்றும் வரி வருவாய் தொடர்பான காரணங்களாலும் வரிகளை முழுமையாகத் தடுப்பது எளிதல்ல எனக் கருதப்படுகிறது.

மறுபுறம், 16 நாடுகளுக்கு மட்டும் பாரபட்சமாக வரி விதிப்பது உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு எதிரானது எனச் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரத்தில், அமெரிக்காவிலும் விலைவாசி உயர்ந்து, சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1,000 டாலர் வரை கூடுதல் செலவு ஏற்படும் என ஆய்வுகள் கணிக்கின்றன.

இந்தச் சூழலில், அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் மத்தியக் கிழக்கு போன்ற புதிய சந்தைகளை விரிவுபடுத்துவதே இந்திய ஏற்றுமதித் துறைக்கு வலிமையான மாற்றாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

புத்தாண்டுக்குப் பிறகு ஈரான் மீது உக்கிரத் தாக்குதல்? பேச்சுவார்த்தை முறிந்தால் போர் நிச்சயம் என ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

MUST READ