ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், பல உயிர்களைக் காப்பாற்றும் வகையில் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரானுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்திலிருந்து அமெரிக்க ராணுவ வீரர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்களைக் காப்பாற்ற ஈரானுக்கு வாய்ப்பு:
ராணுவ வீரர்களிடையே பேசிய டிரம்ப், “ஈரான் போரில் வெற்றி நம் கையில் உள்ளது. நான் விரும்பும் நேரத்தில், விரும்பும் வகையில் அது அமையும். பல உயிர்களைக் காப்பாற்றவும், அமைதி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரானுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஈரான் பயன்படுத்திக் கொள்ளுமா என்பது சந்தேகமாக உள்ளது” என்றார்.
மேலும், ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி மையங்களிலும் ஈரானால் மீண்டும் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள முற்றுகையை, கடற்படை வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான முற்றுகை என்றும் டிரம்ப் வர்ணித்தார். மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், ‘பிக்ஆக்ஸ் மலை’ பகுதி இலக்காக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் நிலைப்பாடு என்ன?:
இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு நாட்டின் வலிமையை அதிகரிப்பதிலும், வர்த்தகப் பாதைகளைத் தடையின்றித் திறந்து வைத்திருப்பதிலும் ஈரான் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எதிரிகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களை முறியடிப்பதே எங்களின் தற்போதைய முக்கிய நோக்கம். ஈரானைச் சுற்றிவளைக்க முடியாது என்பதை எதிரிகளுக்கு உணர்த்தும் வகையில், அண்டை நாடுகளுடன் இணைந்து இரவு பகலாகப் பணியாற்றி வருகிறோம்.
பேச்சுவார்த்தை என்பது எங்களது பணியின் ஒரு பகுதிதான். அதை நாங்கள் மறக்கவில்லை. உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மேற்பார்வையில் அதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், தற்போதைய சூழலில் வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொள்வதே மிக முக்கியமான பணியாக உள்ளது” என்றார்.
அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?:
ஒருபுறம் அமெரிக்காவின் ராணுவ அழுத்தமும் கடற்படை முற்றுகையும் தொடர்வதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் அமைதி மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள் திறந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் அறிவிப்புக்கு ஈரான் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்து அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
விண்வெளியில் பிரமாண்ட ஏ.ஐ. தரவு மையம்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி!
