இந்தியாவின் தொன்மையான நாகரிகம் மற்றும் மொழிப் பன்முகத்தன்மை தன்னை வியப்பில் ஆழ்த்துவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்து எவ்வளவு அதிகமாகத் தெரிந்துகொள்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அதன் மீது ஆர்வம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செர்பிய திரைப்பட இயக்குநர் எமிர் குஸ்தூரிகாவுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவின் சிறப்புகள் குறித்துப் பேசிய புதின், பிரதமர் நரேந்திர மோடியுடனான சமீபத்திய உரையாடல் ஒன்றையும் நினைவுகூர்ந்தார்.
மோடியிடம் மொழிகள் குறித்து கேட்ட புதின்!
இந்தியாவில் எத்தனை பேர் நாட்டின் முக்கிய மொழியைப் பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடியிடம் கேட்டதாக புதின் தெரிவித்தார்.
அதற்கு சுமார் 60 கோடி பேர் பேசுவதாக மோடி தெரிவித்ததாகவும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 150 கோடி என்ற நிலையில், மீதமுள்ள மக்கள் தங்களது சொந்த மொழிகளைப் பேசுவதாகவும் புதின் விளக்கினார்.
இந்தியாவில் நிலவும் இத்தகைய மொழிப் பன்முகத்தன்மை தன்னை ஆச்சரியப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இது உண்மையிலேயே வியக்கத்தக்கது என்று பாராட்டினார்.
இந்தியாவின் தொன்மையான நாகரிகம் மீது ஆர்வம்!
இந்திய நாகரிகம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று என்று குறிப்பிட்ட புதின், அதன் வரலாறு மற்றும் கலாச்சாரம் மிகவும் சுவாரஸ்யமானவை என்றார்.
இந்தியாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும்போது அதன் மீதான தனது ஈர்ப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் இணைந்து வாழும் இந்தியாவின் தனித்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்தியா ஓர் எடுத்துக்காட்டு!
வெவ்வேறு மொழிகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் ஒரே நாட்டில் தங்களது அடையாளங்களைப் பாதுகாத்து வாழ்வது இந்தியாவின் தனிச்சிறப்பு என புதின் பாராட்டினார்.
மேலும், வேற்றுமையுடன் ஒற்றுமையாக வாழும் இந்தியாவின் கலாச்சாரம் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிலும் வெவ்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள் தங்களது தனித்துவத்தைப் பாதுகாத்து வாழ்வதாகக் கூறிய புதின், ரஷ்ய நாகரிகத்தின் பன்முகத்தன்மை குறித்தும் பேசினார்.
இந்தியாவின் மொழி வளம், தொன்மையான வரலாறு மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ள இந்தப் பாராட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
