இந்தியாவின் மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

செர்பியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் எமிர் குஸ்தூரிகா நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதின், இந்தியாவின் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள் குறித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியபோது, இந்தியாவின் மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம். அப்போது இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி பகிர்ந்துகொண்ட தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
இந்தியாவில் சுமார் 150 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு இந்தி முக்கிய மொழியாக இருந்தாலும், மக்கள்தொகையில் ஒரு பகுதியினரே அதைத் தங்களின் முதன்மை மொழியாகப் பேசுகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களது பிராந்திய மொழிகளையே பேசுகின்றனர்.
பல நூறு மொழிகளையும், வெவ்வேறு கலாச்சாரங்களையும் கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இத்தனை வேறுபாடுகள் இருந்தபோதிலும், மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வது மிகவும் வியப்புக்குரியது.
இந்தியாவின் நாகரிகம் மிகவும் பழமையானது. அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழிச் செழுமை குறித்த எனது ஆர்வம் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியுடனான சமீபத்திய உரையாடல், இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழிப் பன்முகத்தன்மை குறித்த எனது புரிதலை மேலும் ஆழப்படுத்தியுள்ளது என்றார்.
