spot_imgspot_img
HomeRewind 2025இந்தியா 2025 : ஆபரேஷன் சிந்தூர், முக்கிய தேர்தல்கள் மற்றும் சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம்...

இந்தியா 2025 : ஆபரேஷன் சிந்தூர், முக்கிய தேர்தல்கள் மற்றும் சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் – ஒரு சிறப்பு தொகுப்பு!

-

- Advertisement -

2025ஆம் ஆண்டில் பகல்காம் துயரத்துக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பழிதீர்த்துக் கொண்டது இந்தியா. பீகார், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அசுர பலத்துடன் வென்றது. துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ஆர் பொறுப்பேற்றார். 2025ஆம் ஆண்டின் 10 முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்

we-r-hiring

1. பகல்காம் பயங்கரம்; 26 சுற்றுலா பயணிகள் பலி :-

ஜம்மு – காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி  தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்கு லஷ்கர்- இ- தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடன்ட்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுக் கொண்டது.

முக்கிய சதிகாரன் என அதன் தலைவன் சஜித் ஸைபுல்லா ஜுட்டே அறிவிக்கப்பட்டான். தாக்குதலை நடத்திய 3 பயங்கரவாதிகளும் ஜூலை 28ல் ‘ஆபரேஷன் மஹாதேவ்’ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான தூதரக உறவுகளை முறித்த இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.

2. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூர்:-

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அதிகாலை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பதிலடியாக மே 8, 9ஆம் தேதிகளின் இரவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் மீது டிரோன்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தாக்குதலை  S-400, ஆகாஷ் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

மே 10ஆம் நாள் இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல், இந்திய ராணுவ ஜெனரலிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாலை 5 மணி முதல் இருநாடுகள் இடையேயான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது

3. டெல்லி, பீகார் மாநிலங்களை வசப்படுத்திய பாஜக:-

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

48 தொகுதிகளில் வென்று பாஜக  27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதலமைச்சராக பிப்ரவரி 20ஆம் தேதி பதவியேற்றார்.

22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்தது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டபேரவைக்கு நவம்பர் 6,  11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

பீகார் தேர்தலில் பாஜக – ஜேடியு கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. பாஜக 89 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஜேடியு தலைவர் நிதிஷ்குமார், 10-வது முறையாக பீகார் முதலமைச்சராக நவம்பர் 20-ல் பொறுப்பேற்றார்.

ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.

4. விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா:-

’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ’டிராகன்’  விண்கலத்தில் இந்தியாவை சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

‘டிராகன்’ விண்கலம் 28 மணிநேரம் பயணித்து, வெற்றிகரமாக ஜூன் 26ஆம் தேதி விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது.

சுபான்ஷு சுக்லா தனது 18 நாள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்து ஜூலை 15 அன்று பூமிக்குத் திரும்பினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தின்போது சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

5. 15-வது குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்:-

குடியரசுத் துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், 2025 ஜூலை மாதம் 21ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனைக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வீழ்த்தி, நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

இதேபோல் உச்சநீதிமன்றத்தின் தலைமையாக இருந்த பி.ஆர்.கவாய் ஓய்வு பெற்றதை அடுத்து, நவம்பர் 24ல் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.

6. இந்தியாவை உலுக்கிய இயற்கை சீற்றங்கள்:-

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக அதீத மழை பெய்தது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் காரணமாக செப்டம்பர் 2025 நிலவரப்படி, 355-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இயற்கைப் பேரழிவுகளால் 85 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாபில், அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கனமழை காரணமாகவும் மாநிலத்தின் 1,400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளிலும் மேக வெடிப்புகளும், திடீர் வெள்ளப் பெருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் மாதத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் உட்பட பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, 8 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர்.

air india accident

7. ஏர்இந்தியா விமான விபத்து – தீயில் கருகிய 241 உயிர்கள்:-

ஜூன் 12ல் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது.

கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 241 பேர் உயிரிழந்தனர். விமானம் வெடித்து சிதறியதில் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அதிசயப்பட தக்க வகையில் விஷ்வேஷ்குமார் ரமேஷ் என்கிற ஒரு பயணி மட்டும் விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இரண்டும் திடீரென “கட்-ஆஃப்” நிலைக்கு மாறி, என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்றதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.

அறிக்கை விமானிகளின் கவனக் குறைவே விமான விபத்துக்குக் காரணம் என்பதை சுட்டிக் காட்டியது.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு விமானியின் பெற்றோர் மற்றும் போயிங் விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

8. தலைநகரை உலுக்கிய கார் குண்டுவெடிப்பு:-

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாசல் எண் 1க்கு அருகில் நவம்பர் 10-ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போக்குவரத்து சிக்னலில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைப் பயன்படுத்தி நடந்த தற்கொலை தாக்குதல் நடைபெற்றது.

காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச்சென்று வெடி விபத்தை நிகழ்த்தினார். இவர் அரியானாவின் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

மத்திய அரசு இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்தது. உமர் உன்-நபிக்கு உதவியதாக இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.

9. இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் போர்:- அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக, இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். வரி உயர்வு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்தது.

பின்னர் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்காக கூடுதலாக இந்தியாவுக்கு 25% வரியை ட்ரம்ப் விதித்தார். இதன்மூலம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதிக்கிறது.

50 சதவீத இறக்குமதி விதிப்பால் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஆந்திர கடல் உணவுகள், சூரத் ஆபரணங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன

எனினும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களை தயாரிக்கும் இந்திய மருந்து ஆலைகள், மின்னணு பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றுக்கு இந்த வரிவிதிப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. விரைவில் ஒப்பந்தம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

10. லடாக் போராட்டமும், சோனம் வாங்சுக் கைதும்:-

லடாக்கிற்கு மாநில அந்தஸ்தும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்​ணா​விரதம் தொடங்கினார்.

போராட்​டத்​துக்கு ஆதரவாக செப்டம்பர் 24ல் லடாக்​கில் முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.

லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள், லடாக் மலைப்​பகுதி மேம்​பாட்டு தன்னாட்சி கவுன்​சில் அலு​வல​கம், பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்தினர். சி.ஆர்.​பி.எப் வேன் உள்ளிட்ட பல வாகனங்​களுக்கு தீவைக்கப்பட்டது

கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 22 போலிசார் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறையை தூண்டியதாக சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2025ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல்கள், இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையையும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வல்லமையையும் வெளிக் காட்டியுள்ளது என்பது நிதர்சனம்.

MUST READ