spot_imgspot_img
HomeRewind 2025உலகம் 2025: போர்கள், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் புதிய விடியல்கள் - ஒரு சிறப்புத் தொகுப்பு!

உலகம் 2025: போர்கள், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் புதிய விடியல்கள் – ஒரு சிறப்புத் தொகுப்பு!

-

- Advertisement -

2025-ஆம் ஆண்டு மனிதகுலம் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும், சில முக்கிய அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் அறிவியல் சாதனைகள் மூலம் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் டாப் 8 முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்.

we-r-hiring

1. காசாவில் மௌனமான துப்பாக்கிகள்: இருண்ட காலத்தின் முடிவு இரண்டு ஆண்டுகால இரத்தக் களரிக்குப் பிறகு, 2025 அக்டோபரில் காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

2023-ல் தொடங்கிய இந்தப் போரில் 67,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரின் தீவிர முயற்சியால், அக்டோபர் 10 அன்று எகிப்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. சில அத்துமீறல்கள் இருந்தாலும், 2026-ல் காசா மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

2. உக்ரைன் – ரஷ்யா: நான்கு ஆண்டுகால போருக்கு முற்றுப்புள்ளி?

ஐரோப்பாவையே உலுக்கி வந்த உக்ரைன் – ரஷ்யா போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 28 அம்ச திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணையும் கோரிக்கையை தற்காலிகமாகக் கைவிட ஒப்புக்கொண்டார். பதிலுக்கு உக்ரைனுக்கு பலமான பாதுகாப்பு உத்தரவாதமும், 8 லட்சம் வீரர்கள் கொண்ட ராணுவத்தைப் பராமரிக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.

3. இயற்கையின் கோரத் தாண்டவம்: நிலைகுலைந்த நாடுகள்

2025-ல் இயற்கை தனது கோர முகத்தை பல இடங்களில் காட்டியது:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனவரி 7-ல் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயால் 440 பேர் பலியாகினர், 18,000 கட்டிடங்கள் சாம்பலாகின.

மியான்மர் மண்டாலேவில் மார்ச் 28-ல் ரிக்டர் 7.7 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நடுக்கத்தால் 3,700 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஜூலை 4 முதல்  7 வரை பெய்த அதீத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 137 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் அருகே ஆகஸ்ட் 31-ல்  ரிக்டர் 6.0 நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சூடானின் தாராசின் கிராமத்தில் ஆகஸ்ட் 31-இல் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணில் புதைந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்களும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.

சென்யார் புயல் :- 2025-ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் – டிசம்பர் காலகட்டத்தில்‘மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை சென்யார் புயல் உலுக்கியது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் நவம்பர் மாதம் வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்தது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 400 பேர் வரை மாயமாகினர்.

ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை: 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியாவில் இந்த எரிமலை வெடித்தது. இதன் சாம்பல் படலம் இந்தியா வரை வான்வழிப் போக்குவரத்தைப் பாதித்தது.

4. புதிய தலைவர்கள்: உலக அரசியலில் மாற்றம்

ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.

போப் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து வந்த ராபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் (14-ஆம் லியோ) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெர்மனியில் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, புதிய பிரதமராக பிரெட்ரிக் மெர்ஸ் பதவி ஏற்றார்

ஜப்பானின் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக சானே டகாய்ச்சி அக்டோபர் 21-ல் பதவியேற்று சாதனை படைத்தார்.

5. ‘ஜென்-ஸீ’ (Gen Z) புரட்சி: இளைஞர்கள் கையில் அதிகாரம்

இந்த ஆண்டு இளைஞர்கள் வீதிக்கு வந்து பல நாடுகளின் ஆட்சியை மாற்றியமைத்தனர்.

ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்.

மடகாஸ்கரில் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடங்கிய போராட்டம் ராணுவப் புரட்சியில் முடிந்தது.

இந்தோனேசியா, மொராக்கோவில் அரசின் வீண் செலவுகளுக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழுந்து வெற்றிகண்டனர்.

மெக்சிகோவில் மேயர் படுகொலையை கண்டித்து தேசிய மாளிகைக்குள் நுழைந்து இளைஞர்கள் போராடியதால் அதிபர் ஷென்பாம் அரசு ஆட்டம் கண்டது.

6. அச்சுறுத்திய பிராந்தியப் போர்கள்

ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் இஸ்ரேல் – ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஏவுகணை மழையைப் பொழிந்தன. அமெரிக்காவின் தலையீட்டால் மூன்றாம் உலகப் போர் அபாயம் தவிர்க்கப்பட்டது.

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் ஜுலை மாதம் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர்.

எல்லைப் பிரச்சனை மற்றும் ஆடியோ சர்ச்சை காரணமாக தாய்லாந்து பிரதமர் பதவியிழந்தார்; டிசம்பரில் மீண்டும் மோதல்கள் தொடர்ந்த நிலையில், மலேசியாவின் தலையீட்டினால் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஜுன் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மோதல்களில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானார் கொல்லப்பட்டனர்.

கத்தார், துருக்கி நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக இருதரப்புக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும் எல்லையில் பதற்றம் தொடர்கிறது.

7. விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸின் மீட்சி

2024 ஜூன் மாதம் 8 நாள் பயணமாகச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பக் கோளாறால் விண்வெளியிலேயே சிக்கினார்.

286 நாட்களுக்குப் பிறகு, எலான் மஸ்கின் SpaceX Dragon-10 விண்கலம் மூலம் 2025 மார்ச் 19 அன்று பத்திரமாகப் பூமி திரும்பினார். இது விண்வெளி வரலாற்றில் மிக நீண்ட மீட்புப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

8. 2025 நோபல் பரிசுகள்:

அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் சில முக்கிய கண்டுபிடிப்புகள்:

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை முறைப்படுத்தும் ‘டி’ (T-cells) செல்கள் பற்றிய ஆய்வுக்காக வழங்கப்பட்டது.

குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆய்வுகளுக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் மூவர் பெற்றனர்.

உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான ஆய்வுக்காக மூவருக்கு விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.

வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் போராடிய மரியா கொரினா மச்சோடோவுக்கு வழங்கப்பட்டது.

புதுமைகள் அடங்கிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு வழங்கப்பட்டது

2025-ஆம் ஆண்டு கண்ணீரையும், அதே சமயம் மனிதனின் மீளெழுச்சித் திறனையும் (Resilience) உலகுக்குக் காட்டியுள்ளது.

MUST READ