நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ராயன் எனும் திரைப்படம் வெளியான நிலையில் இதைத் தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இளையராஜாவின் பயோபிக் படம், தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் தனுஷ், அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படமானது நடிகர் தனுஷின் 55வது படமாக உருவாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் இணைந்து 3 திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -